கீழ்ப்பாக்கம் ஜிஹெச்சின் முகப்புப் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு, சட்ட மருத்துவத் துறைக் கட்டிடத்தை நோக்கி நடந்தபோதுதான் ரேணுவுக்கு அந்த சந்தேகம் வந்தது.
'மணி ஏழாகிறது. அரசு அலுவலர்கள் எல்லாம் ஐந்து மணிக்கே நடையைக் கட்டிவிடுவார்களே.. இவனைத் தேடிக்கொண்டு இப்போது எங்கே செல்வது??'தனது வேலைசெய்யாத மூளையை நொந்துகொண்டே திரும்பிச் செல்ல நினைத்துத் திரும்பியவள், சிமெண்ட் கூரை அடியில் அவனது அரதப்பழைய ஸ்ப்ளெண்டர் பைக்கைப் பார்த்ததும் நிம்மதியாகித் திரும்ப உள்ளே நடந்தாள்.
ஜெர்ரியின் அறைவாயிலில் நின்று, அட்டெண்டர் யாரேனும் தென்படுகின்றனரா எனத் தேடிப்பார்த்தாள் அவள். யாரும் இல்லை அப்போது. சரியெனத் தானே இருமுறை கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள்.
பதில் வரவில்லை.
"ஜெர்ரி.." என அழைத்துப் பார்த்தாள்.
ம்ஹூம். பதிலில்லை.
தானே கதவைக் கொஞ்சமாகத் திறந்து எட்டிப் பார்த்தாள் அவள்.
மேசையில் படுத்து அப்படியே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் அந்த மருத்துவன். ரேணு வியப்பாகப் பார்த்துவிட்டு, உள்ளே நுழைவதற்காகக் கதவை முழுவதுமாகத் திறந்தாள்.
ஓசையெழுப்பிட வேண்டாமென மெதுவாகத்தான் தள்ளினாள், ஆனாலும் கதவு கைவிட்டுவிட்டது. கிரீச்சென்ற சத்தத்தில் ஜெர்ரி விழித்து நிமர, ரேணு அசட்டுத்தனமாகத் தலையைத் தடவிக்கொண்டாள்.
"ஹிஹி.. சாரி.."
"என்ன வேணும்?"
குரலில் கோபமில்லை. சாந்தமாகத்தான் கேட்டான் அவன். ஆனால் முன்பின் அறியாதவர்களிடம் பேசுவதுபோல் ஒட்டுதலின்றி இருந்தது தொனி.ரேணு அமைதியாக உள்ளே வந்து அவனெதிரே அமர்ந்தாள்.
"காலைல நான் அப்படி செஞ்சது தப்புதான். சாரி. ஆனா நான் வேணும்னு செய்யல. உங்க சீஃப் திடீர்னு கத்தினாரா, அதுல தான் நான் அப்படியெல்லாம் பேசிட்டேன். உன்னை கஷ்டப்படுத்தணும்னு எதையும் செய்யல நான். இப்ப அதெல்லாம் வீணாத்தான் போனது, தெரியுமா? அந்த நியூஸ் கையை விட்டுப் போயிடுச்சு. எனக்கும் வேலை போகப்போகுதுன்னு நினைக்கறேன். If it makes you feel better, I think I deserve it."
ESTÁS LEYENDO
உயிர்வரை தேடிச்சென்று
Misterio / Suspensoவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...