"மனோ!!!" அதிர்ச்சியாக சத்தமிட்டாள் ரேணு. "என்ன பேசற நீ??"
"ப்ச், ப்ளீஸ்! நீ வேணா கவனிக்காம இருந்திருக்கலாம், எனக்கு கண்ணெல்லாம் நல்லா வேலை செய்யுது. மத்தவங்க யாருகிட்டயும் முகம் குடுத்தே பேசாதவன், உன்னை மட்டும்தான் கண்ணைப் பார்த்துப் பேசுவான். நானும் உன்கூடத்தான் இருப்பேன், ஆனா என்னைத் திரும்பிக் கூட பாக்க மாட்டான். இன்ஸ்பெக்டர் மேடத்தை கூட நிமிர்ந்து பாக்க மாட்டான். ஆனா நீன்னா மட்டும்... நீ வேணா எழுதி வெச்சுக்கோ, நாம போயி ஹெல்ப்புன்னு கேட்டதுமே ஒத்துக்குவான் அவன்."
ரேணு இன்னும் நம்பமாட்டாமல் பார்த்தாள் அவனை. அவள் மறுத்துப் பேசுமுன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு, "டேக் கேர், குட்நைட்" என்றுவிட்டு அவன் கிளம்பிவிட, அன்றிரவு வெகுநேரம் தூங்காமல் விழித்திருந்தாள் ரேணு. ஜெர்ரியை நினைத்தபோது, மனதில் வேறொரு முகம் தன்னிச்சையாகவே தோன்றுவதைத் தடுக்கத் தெரியவில்லை அவளுக்கு.
கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகின்றது, அவன் சென்று.
கசப்பான உணர்வொன்று நா முதல் அடிமனது வரை படர, சத்தமிட்டு சலித்துக்கொண்டு, தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள் அவள்.
***
அண்ணா நகரில் 'பட்டர்ஃப்ளை' எனப் பெயரிடப்பட்ட புது சிற்றுண்டிக் கடை ஒன்றில் அமர்ந்து காத்திருந்தான் மனோ. கைபேசியில் காலையிலிருந்தே மூடாமல் திறந்து வைத்திருந்த யூட்யூப் செயலிதான் இப்போதும் ஓடிக்கொண்டிருந்தது. பொறுமையின்றி மீண்டுமொருமுறை நிமிர்ந்து ரேணுவுக்காகக் கண்களை அலையவிட்டான் அவன்.
அவள் இன்னும் வந்தபாடில்லை.
நண்பகல் பதினோரு மணியின் வெள்ளை வெய்யில் கதவின் வழியே கொஞ்சம் நுழைந்தது. வலதுபுறம் அலங்காரப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த சுவரைச் சுற்றி, சில இளம்பெண்கள் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
கதவைத் திறந்துகொண்டு அவசரமாக உள்ளே நுழைந்தாள் ரேணு. கருநிற சுடிதாரும், வெள்ளி ஜரிகை போட்ட காட்டன் துப்பட்டாவும் அணிந்திருந்தவள், முகத்தில் எவ்வித அலங்காரமும் இன்றி இருந்தாள்.
முகத்தில் விழுந்த கேசத்தைக் காதுக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டவாறே மனோவின் எதிரே வந்தமர்ந்தாள் அவள்.
DU LIEST GERADE
உயிர்வரை தேடிச்சென்று
Mystery / Thrillerவாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்...