15 காதலன்!
“என் பெருமையை சோதிக்காதே ராதா”
“ஓ… ராதை இப்போ ராதாவா மாறிடுச்சி இல்ல”
“ராதா நான் முன்னவே சொல்லிட்டேன், உன் கூட சண்டை போட எனக்கு விருப்பமில்லை”
“ஓ… பேச விருப்பம் இல்லையா?”
“உனக்கு என்ன செவுடா? நான் எங்கே உன் கூட பேச விருப்பமில்லைன்னு சொன்னேன். சண்டை போடதான் விருப்பமில்லை சொன்னேன்” கிட்டத்தட்ட கத்தினான் மாதவக் கண்ணன்.
அவனது இந்த சத்தம் ராதாவை அதிரவைத்தது.
தேம்பிக்கொண்டே, “நீங்க எதுக்கு கத்துரிங்க… எனக்கு உடம்பு நடுங்குது”
“நடுங்கட்டும்… ஒரு ஒரு நிமிசமும் என்னை நடுங்கதானே வச்சிட்டு இருக்க”
“நான் என்ன செஞ்சேன்?”
“நீ என்ன செய்யலை, நான் நானாவே இல்லை. அது உனக்கு தெரியுமா, என்னை மொத்தமாக மாத்தியது மட்டுமில்லாமல் என் உயிரை வாங்கிட்டிருக்க”
“நா… நான் என்ன செஞ்சென்”
“வாயை மூடுடி... ச்சி என் நிம்மதி போச்சி ஒரு ஒரு வார்த்தையும் உன்கிட்ட பாத்து பாத்து பேசனும், ஆனா நீ என்ன பேசினாலும் தவறில்லை”
“நான் எப்போ அப்படி சொன்னேன்”
“நீ இதை வெளிப்படையா சொன்னதில்லை ராதா, ஆனா என் மண்டைக்குள்ள வச்சி ஆட்டிட்டு இருக்க, நான் உன்னை பத்தி தானே நினைச்சிட்டு இருக்கனும், எனக்கு என் வேலை முக்கியமில்லை, என் தூக்கம் முக்கியமில்லை, உனக்கு எல்லா வேலையும் செய்து கொடுக்க வேண்டும், உன்னை பத்தி மட்டும் யோசிக்கிற. என்னை பத்தி என்னைக்காவது யோசித்து இருக்கியா நீ, செல்ஃபிஸ்.”
“நானா?” ராதா அதிர்ந்து நின்றாள்.
“எனக்கு உடம்பு சரியில்லை’ன்னு சொன்னா கூட காதில் நுழைந்த பூச்சி போல குடஞ்சிட்டு போனவ”
“…..” ராதாவிடம் இருந்து அமைதி, ‘நான் கொடுமை படுத்தினேனா! அவன்தான் என்னிடம் பேசினால் உடல் நிலை கூட மறந்திடுறேன்னு சொன்னானே அதனால் தானே பேசினேன். விடிய விடிய பேசினோமே பர்த் டே அப்ப அது எல்லாம் அவனை வறுத்திட்டுதான் செஞ்சானா?”