27
தான் அவள் வாழ்க்கையில் இல்லை என்றால் அவள் சந்தோஷமாக இருக்கனும் என்று தானே பிரிந்து போனேன். எதையும் இயல்பாக எடுத்துக்கொள்வது போலவே இதையும் எடுத்துக் கொள்வாள் என்று தானே விட்டுட்டு போனேன். இன்று இருக்கும் மனநிலை அவனுக்கு அப்போது இருக்கவே இல்லை. பதறிய போது எடுத்த முடிவு இப்போது தவறாக முடிந்திருந்தது.
வாழ்க்கை முடிந்து போன நிலையில் தான் இருந்தான், அவனுக்கு குழந்தை என்றால் கொள்ளை பிரியம், அதும் தன்னை போல அமைதியான குழந்தை எல்லாம் பிடிக்காது ராதையை போல சேட்டை செய்யும் குழந்தைதான் பிடிக்கும் அவனுக்கு.
திருமணம் பற்றி எண்ணம் வரும்போது எல்லாம் "கடவுளே நீ என்ன செய்வியோ என்று தெரியாது. எனக்கு ராதை போல ஒரு குழந்தை கொடுத்துடு புரியுதா" என்று அவன் நினைக்காத நாளில்லை. பல வருடமாக வளர்த்து வந்த ஆசைகள் ஒரே நாளில் உடைந்ததை நினைத்து, அவனுக்கு தாங்கிக் கொள்ள முடியாத நிலை, அந்த நேரத்தில் அவசரமாக முடிவு எடுத்தான், தவறை இன்றுதான் உணர்ந்தான் மாதவன்.
அவள் கொடுத்த மோதிரத்தை அப்பவே கையில் அணிந்து கொண்டான், அவள் என் வாழ்வில் இல்லாவிட்டாலும் அவள் நினைவாக இறுதி மூச்சி வரை பார்த்துக்கொண்டு சாக நினைத்தான்.
அதனை ஆசையாக வருடி விட்டவனுக்கு மனம் முழுவதும் ரணம்தான் மிஞ்சி இருந்தது.
"மாதவன் என்ன ஆச்சி?"
"தப்பு செய்ததை காலம் கடந்து இன்று தான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா"
"ம்ம்ம்ம்... நீங்க நினைப்பது போல அவள் ரொம்ப ஸ்போட்டிவ் ஆன பொண்ணு தான், ஆனால் அது உங்க விஷயத்தில் இல்லை மாதவன்"
"ம்ம்ம் இப்போ தான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா, ஆனா இனி எனக்கு மன்னிப்பும் இல்லை. அவள் வாழ்வில் நண்பன் என்ற இடமும் இருக்க போவதில்லை என்று புரிந்தது"
"உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு தான் சொன்னா, ஆனா என்னால இனியும் மறைக்க முடியலை மாதவன்"