அந்த பிரம்மாண்ட மாளிகையினுள் கார் நுழைந்தது...
காரில் இருந்து இறங்கிய ராகவ் பதட்டத்துடன் அந்த மாளிகையை பார்த்தான்.
நேற்று இங்கு ஆவலோடு வந்து அவமானப்பட்டு வாசலோடு திரும்பிச் சென்றது ஞாபகம் வந்தது.
அவன் கண்கள் பனித்தது. அவமானப் பட்டதினால் மட்டும் அல்ல.. தன்னை தன் குடும்பமே ஒதுக்கி விட்டதே என்ற வலி அவனுக்கு.
இன்றும் அதே ஒரு சூழல், ஆனால் உடன் தன்னவள் இருக்கிறாள்.
தான் சொல்லா விடினும் தன் பிரச்சினை என்னவென்பதை அவள் புரிந்து கொண்டாள் என்பதில் அவனுக்கு சந்தோஷமே இருந்தாலும். தன்னால் அவள் எங்கே அவமானப்பட்டு விடுவாளோ என்ற பயமும் அவனை தொற்றிக் கொண்டது..
அம்மு நான் சொல்றதை கேளு.. நாம திரும்பி போயிடலாம் வா ப்ளீஸ்....
அட... என்ன மாமு நீங்க தேவை இல்லாம எதுக்கு பயப்படுறீங்க.
இல்லம்மா நீ சொன்னா புரிஞ்சுக்கோ.. தாத்தா ரொம்ப கோவக்காரரு.. கோவம் வந்துச்சுன்னா என்ன? பேசுறார்னு அவருக்கே தெரியாது... தேவையில்லாம பிரச்சனையா ஆயிடும்.. என் தலையெழுத்து இதுதான்னு நான் இருந்துக்கிறேன் நீ வாடா போயிடலாம்...
அட என்ன? நீங்க, அப்படி என்ன? அவரு பெரிய கோவக்காரர் என்று நானும் பார்த்துட்றேன்.
அது..... இல்ல மா என்று அவன் தயங்க.
இத பாருங்க சும்மா, சும்மா காரணம் சொல்லிட்டு இருக்காதீங்க. உள்ள போக போறீங்களா இல்லையா..?
அதற்கு மேல் அவளிடம் வாதாடுவது வீண் அவளது பிடிவாதம் தெரிந்த ஒன்றுதானே.. மெல்ல அடி எடுத்து உள்ளே சென்றான்.
காரில் இருந்த சில பைகளை கையில் எடுத்துக்கொண்டு முன்னே செல்ல முற்பட்டவள்... நின்று திரும்பி கார்த்தியை பார்த்தாள்..
கண்களால் இமைத்து, தைரியமாக போ என்று அவளுக்கு பதில் உரைத்தான்.
தான் துவண்டு விடும் நேரத்தில் எல்லாம் துணை கொடுக்கும் தோழன் அல்லவா. இன்றைக்கும் அவன் கொடுத்த நம்பிக்கையாலேயே இந்த முடிவை எடுத்துல்லாள்...
