நாட்கள் மெல்ல நகர்ந்தோடின.. அன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு செண்பாவும் ராகவும் ஒருவரை ஒருவர் பார்ப்பதை அடியோடு நிறுத்தினர்.
நேரிலோ, சமூக ஊடகங்களிலோ ஏன் நண்பர்கள் மூலமாக கூட அவர்களை தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டனர்.
தற்செயலாக நேரில் பார்க்க நேர்ந்தாலும் யாரோ போல் இருவரும் நடந்து கொண்டனர்.
சூழ்நிலை காரணமாகவும், தங்கள் காதலை நிரூபிக்கும் பொருட்டும்.. இதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஒருவரின் ஒதுக்கம் இன்னொருவரை நிலைகுலையவே செய்திருந்தது.
ராகவ் பார்ப்பதற்கு சோர்ந்து, உடல் இளைத்து முகம் வாடிப் போயிருந்தான்.
செண்பாவின் நிலையோ இன்னும் மோசம் புராண காலத்தில் காதலனை பிரிந்து பசலை நோய் கண்ட காதலியை போல் பார்ப்பதற்கு மிகவும் சோர்ந்து போய் இருந்தாள்..
இருவரும் தங்களின் வேலைகளில் கவனத்தை செலுத்தினர்.
இவர்களின் நிலை கண்ட அவர்கள் நண்பர்களுக்கு பாவமாக இருந்தது..
நாட்கள் வாரங்களாக மாறியது வாரங்கள் மாதங்களாக மாறியது. இன்றும் இருவர் நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
செண்பாவின் வீட்டின் தரப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவளை இன்னும் பாதுகாக்க ஆரம்பித்தனர். அவளைப் தனியே விடாமல் எப்பொழுதும் அழைத்துச் செல்ல ஒருவர் உடன் இருந்தனர்.
ராகவ் ஒரு நாள் தன்னுடைய பழைய நண்பர்களை சந்திக்க சென்றிருந்தான். பொறுத்திருந்த நண்பர்கள் வெறுத்து போய்.
டேய்.... நீ இப்படியே நம்பிகிட்டு உட்கார்ந்திரு அவங்க உனக்கு நல்ல ஆப்பு வைக்க போறாங்க.
விரக்தியில் புன்னகையே பதிலாய் தந்து அமைதி காத்தான்.
இப்ப சொல்லு நான் போய் பாப்பாவை தூக்கிட்டு வந்துடறேன்.. இன்னைக்கு சாயந்தரம் கோயிலில் வைத்து கல்யாணம் பண்ணிக்கோ.
இதுக்காடா நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்.....
லூசு மாதிரி குடும்பம், கௌரவம் என்று பேசாதே.. ஏன்?டா வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணவங்க என்ன தனியாவேவா வாழ்ந்து இருக்காங்க. கொஞ்ச நாள் போனதும் மன்னிச்சு ஏத்துக்கல.. நீ மட்டும் ஏன் எல்லாரும் வேணும்னு அடம் புடிச்சுட்டு தொங்கிட்டு இருக்க...!?