சுடும் நிலவு சுடாத சூரியன் – 9
ஸம்யுக்தா கண் விழித்தப் போது, தான் ஒலை பாயில் படுத்திருப்பது தெரிந்தது. உடலை அசைக்கவே முடியாமல் வலித்தது. கண்கள் எரிந்து, நீர் கன்னங்களில் வழிந்தது. திரும்பவும் கண்களை மூடி கொண்டாள். கால்கள் இரும்பு குண்டுகளாக அசைக்க முடியாமல் வலித்தன. தலையில் இடி இடிப்பதை போல உணர்ந்தாள். உடம்பு அனலாக கொதித்தது. எதையும் யோசிக்க முடியாமல், சோர்வாக இருந்தது.
சிறிது நேரத்தில் அவளது நெற்றியை யாரோ தொடுவதை உணர்ந்து, கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள். அவளருகே ஒரு வெண்ணிற தாடியுடன் வயதான மனிதர் குனிந்து அவள் இடது கையைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டிருந்தார். அவள் கண்கள் திறந்ததைப் பார்த்து, ஆதூரமாக தலையை வருடினார்.
அவரது இதமான வருடல், நெஞ்சில் சொல்ல முடியாத சோகத்தை ஏற்படுத்த, அவளது கண்களில் கண்ணீர் பெருகியது. அவளது விழிநீரை துடைத்தவர், அவளது கால்களின் புண்களில், பச்சிலையை மயிலிற்கினால் தடவினார். எதையோ அவரிடம் சொல்ல நினைத்து சொல்ல முடியாமல் மீண்டும் கண் மூடினாள்.
அவர் வெளியே சென்று யாரையோ அழைத்து வந்தார். இருவரின் காலடியோசை கேட்டும், கண் விழிக்க தெம்பின்றி அப்படியே இருந்தாள். முதியவர் அவளின் தலையை மீண்டும் வருட, கண்களை விழித்தாள். அவரது அருகே நாற்பது வயது மதிக்கதக்க மனிதர் காக்கி போன்ற சீருடை அணிந்திருந்தார்.
அவளது அருகே குனிந்தவர், "உன் பேர் என்னம்மா?" என கேட்டார். வாயை திறக்க முயன்று, முடியாமல் வலிக்க சலிப்புடன் கண்களை மூடி கொண்டாள். அதற்குள் அந்த முதியவர், சிறிய மண் பாத்திரத்தில் எதையோ எடுத்து வந்து அவளது வாயை பற்றி திறந்து அதில் விட்டார். தொண்டையில் இனிப்பாக இறங்கும் போதே, அது தேன் கலந்த நீர் என்பதை உணர்ந்தாள்.
உடல் சற்றே தெம்படைவதை உணர்ந்தவள், "ஸ்ம்யு.." என மெதுவாக சொன்னது அவளுக்கே கேட்கவில்லை. சீருடை அணிந்தவர், அவளருகே குனிந்து மறுபடியும், "யாரும்மா நீ?" என சத்தமாக கேட்டார். அவர் சத்தமாக கேட்டது தலையை வலிக்க, அலுப்புடன் கண்களை மூடி கொண்டாள்.
YOU ARE READING
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்