பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்து வைத்தவள் அங்கு க்ளயன்ட் முன் காண்பிப்பதற்கான ப்ரஸென்டேஷனையும் சரிபார்த்து தன் மடிக்கணினியையும் அதன் இணைப்புகளையும் தனது பையில் எடுத்து வைத்தாள். பாட்டியிடம் கூற அவர் பல கேள்விகளை அடுக்கினார். 'யாரோடு செல்கிறாய்? எத்தனை நாள்? பாதுகாப்பாதனா தங்குமிடம்? உடன் ஏதேனும் பெண்கள் வருகிறார்களா?' போன்ற பல கேள்விகளை தொடுத்தார்.
அவருக்கு விளக்கம் சொல்லி தெளிய வைத்தவள் ராகவின் எண்ணிற்கு அழைத்தாள். காலையில் அவன் எழுவதே பத்து மணிக்கு என்பதால் வதனா ஆறு மணிக்கு பலமுறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவனை மனதில் திட்டியவள் தன் உடமைகளோடு கேப் புக் செய்து விமானநிலையம் நோக்கி பயணித்தாள். நாளை மதியம் தான் சந்திப்பு என்பதால் உடுத்துவதற்கு இலகுவான இளம்பச்சை நிற குர்தி அணிந்திருந்தாள்.
விமான நிலையத்தின் உள்ளே நுழைந்தவள் அங்கிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து திரவியத்திற்காக காத்திருந்தாள். அங்கு காத்திருக்கும் நேரத்தில் ராகவின் அன்னைக்கு அழைத்தவள் அவரிடம் தான் செல்லும் பயணம் குறித்து கூறி ராகவிடம் கூறிவிடுமாறு கூறினாள். அவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது தன் உடமைகளோடு அங்கே வந்த திரவியம் நேராக பிஸினஸ் க்ளாஸ் இல் பயணம் செய்வோருக்கென இருந்த ஒய்வறைக்கு சென்றான்.
அவன் செல்லும் போது அதைக் கவனித்தவள் அழைப்பை துண்டித்து விட்டு அவனைப் பின்தொடர்ந்தாள். தன் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து விட்டு நடந்தவன் அருகே வேகமாக நடந்து வந்த வதனாவும் இணைந்து கொண்டாள். அருகே அரவம் கேட்டு தன் வலது புறம் திரும்பியவன் வதனாவை அப்போதே கவனித்தான்.
அவள், "ஹாய்" என்று புன்னகைக்க, திரவியமும் பதிலுக்கு புன்னகையோடு தலையசைத்தான். இருவரும் உள்ளே நுழைந்து விமான நிலையத்தின் பிற சரிபார்ப்பு முடியும் வரை காத்திருந்தனர். அருகே அமர்ந்திருந்தவளை அவள் தன் பையில் எதையோ தேடிய போது ரசித்தவன் அவள் திரும்பியதும் அங்கிருந்த வர்த்தக வார இதழ் ஒன்றை வாசிப்பது போல பாசாங்கு காட்டினான். அவன் ஏதேனும் பேசுவான் என்று காத்திருந்தவளுக்கு அவன் மௌனமாக அந்த இதழில் மூழ்கியது ஏமாற்றம் அளித்தது.
YOU ARE READING
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...