அவளது எண்ணிற்கு அன்று காலை ஒரு குறுஞ்செய்தி வந்தது. வேலைக்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தவள் தனது பையில் அனைத்தையும் சரிபார்த்து விட்டு பரமேஸ்வரியிடம் கூறிவிட்டு கேபில் ஏறி அமர்ந்தாள். அதன் பின்னர் அவள் தன் கைபேசியைப் பார்க்க அந்த குறுஞ்செய்தி திரவியத்திடம் இருந்து வந்திருந்தது என அறிந்ததும் ஆவலோடு அதை திறந்து பார்த்தாள்.
'எனது புதிய நாள் உன் புன்முறுவலுடன் தொடங்கட்டும்'
அதைப் பார்த்ததும் அவள் இதழ் தானாக புன்முறுவல் பூத்தது. என்னதான் இணையம் தொடங்கி அனைத்துமே ஆங்கிலமாகிப் போனாலும் தமிழில் வாழ்த்து கூறுவதும் குறுஞ்செய்தி அனுப்புவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மாறி உள்ள சூழலால் அவள் அறிந்த பலரும் அதை விரும்பவில்லை. அதனாலேயே அவள் பெரும்பாலும் குறுஞ்செய்திகளில் ஆங்கிலத்திலேயே உரையாடத் தொடங்கினாள். இருப்பினும் அவள் புத்தக அலமாரியில் பாதி புத்தகங்கள் தமிழ் புத்தகங்களே. எனவே, திரவியம் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பியதும் அவளையும் அறியாமல் அவள் உள்ளம் துள்ளல் போட்டது. அதற்கு பதில் என்ன அனுப்புவது என்று யோசித்தவள் பின்,
'புன்னகையோடு காலை வணக்கம் :)'
என்று அனுப்பினாள்.
ஆனால் அப்போது அவன் ஒரு முக்கிய சந்திப்பில் இருந்ததால் அவன் எண் சைலண்ட் மோடில் இருந்தது. அவனிடம் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தி வரும் என்று எதிர்ப்பார்த்தவள் அதற்குள் கம்பெனி வந்துவிட அதன்பின் தன் வேலையில் மூழ்கிப் போனாள். என்னதான் வேலை அதிகம் இருந்தாலும் அவள் கண்கள் மட்டும் கைபேசியையே சுற்றிக்கொண்டு இருந்தன.
சந்திப்பு முடிந்து வந்தவன் தன் கைப்பேசியை பார்த்தான். அதில் அவள் குறுஞ்செய்தியைக் கண்டதும் அதைப் படித்தவன் ஆவலோடு மற்றுமொரு குறுஞ்செய்தியை ஆவலோடு அனுப்பினான். பின், மீண்டும் தன் வேலையில் மும்முரமாக இறங்கியவன் அன்று மதியமே மீண்டும் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் அனைத்தையும் விரைவாக கவனமாக பார்வையிட்டான். பின் அவன் பி.ஏ விடம் தான் இல்லாத நேரத்தில் என்னென்ன நடக்க வேண்டும் என்று பட்டியலிட்டு கூறி புறப்பட்டான்.
YOU ARE READING
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...