ஒரு வேகத்தில் தன் மனதில் உள்ளவற்றை வதனாவிடம் கூறிவிட்டாலும் அதற்கு அவள் என்ன பதில் கூறுவாள் என்று புரியாமல் திரவியமும் தன் தூக்கத்தை தொலைத்தான். அடுத்த நாள் காலை அவன் அன்னையிடம் இயல்பாக பேசிவிட்டு அவன் கிளம்ப அவனிடம் அவர், "நில்லு ஏன் ஓடுற? அந்த பொண்ணப்பத்தி எப்போ என்கிட்ட சொல்லப் போற?" என்று கேட்டார்.
அந்த கேள்வியை அவன் எதிர்நோக்கி இருந்ததால் பதட்டமின்றி, "என்னோட ஆஃபிஸ்ல வொர்க் பண்ற ஃபர்ண்ட் மா வதனா. ஒரு சின்ன சேலன்ஜ் எங்களுக்குள்ள. நான் அவ இன்ட்ரெஸ்ட் என்னனு கண்டுபிடிச்சு புக்ஸ் கிஃப்ட் பண்ணேன். அந்த மாதிரி அவ எனக்கு சர்ப்ரைஸ் ப்ளான் பண்ணா" என்று உண்மையும் பொய்யும் கலந்து கூறினான்.
அவனை உற்றுநோக்கிய அவன் அன்னை, "என்கிட்ட உன் ஆக்டெங்கலாம் எடுபடாதுன்றத மறந்துட்டியா? உனக்காக இவ்ளோ தூரம் எல்லாம் பார்த்து பார்த்து பண்ணிருக்கா. நீலாம் கிஃப்ட் கொடுக்ற ஆளே கிடையாது. ஆனா, புக்ஸ் கிஃப்ட் பண்ணிற்க. உனக்கு தமிழ் வராதுனு தான் லெவன்தல நீ ஃபரென்ச் எடுத்து படிச்ச. அப்படி பட்ட நீ தமிழ் ஆன்லைன்ல கத்துக்கிறது யாராலனு கூட எனக்கு தெரியாதா. நீ என்கிட்ட பேசாம இருந்திருக்கலாம். ஆனா, அம்மாக்கு உன்னோட ஒவ்வொரு அசைவும் தெரியும். நீ எப்போ என்ன யோசிப்பேனும் தெரியும். சொல்லுடா அந்த பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டியா?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.
இதற்கு மேலும் அவரிடம் தன் திட்டம் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்தவன் நேற்று அவன் அவளிடம் கூறியதை கூறினான். அதைக் கேட்டு அவர் தன் தலையில் அடித்து கொண்டு, "என்ன இது? இப்படியா ஒரு பொண்ணுகிட்ட லவ் சொல்வாங்க? இவ்ளோ பெரிய கம்பெனிக்கு எம்.டினு வெளில சொல்லிடாத. அவ உனக்காக சர்ப்ரைஸ் தரனும்னு வீட்டக் கண்டுபிடிச்சு உனக்கு பிடிச்சதெல்லாம் பார்த்து பார்த்து சேர்த்து கொடுத்தா. நீ என்னடான்னு ஏதோ கம்பெனில அக்ரிமென்ட் சைன் பண்ற மாதிரி பட்டுனு சொல்லிட்ட. உன் அப்பாலாம் எனக்கு எப்டி சொன்னான் தெரியுமா?" என்று பழைய நினைவுகளில் புன்னகைத்தார்.
YOU ARE READING
காதலையும் கடந்த உறவு
Romanceநட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். ...