அந்தத் தெருவிலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது ரூஹியின் வீடு. கல்யாண வீடென்றால் சும்மாவா?
மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருக்க, எல்லோரும் பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தனர். மணப்பெண் ஒரு அறையில் தயாராகி முடிக்க, ஷக்கூரா தானும் தயாரிக் கொண்டு மணப்பெண்ணைப் பார்வையிடுவதற்காக வந்தாள். முதலிலேயே வுழு செய்திருந்ததால் ரூஹி லுஹர் தொழுகையை அதானைத் தொடர்ந்து நிறைவேற்றிவிட்டு அமர்ந்திருந்தாள். நினைவுடன் அவள் மாமி வீட்டிற்கு எடுத்துச் செல்லவிருந்த தன் ஆடைகள் போடப்பட்டிருந்த லக்கேஜிலே சாராவின் டயரியையும் எடுத்து வைத்துக்கொண்டாள்.
அங்கு வெண்பனியிற் கிடந்த ஒரு பொம்மை போல இருந்தாள் அனம் ரூஹி. கண்களுக்கும் உதடுகளுக்கும் மட்டுமென மிகவும் எளிமையாக மேலும் அழகு சேர்க்கப்பட்டு இருந்தது. அதுவும் வேண்டாமென தான் அடம்பிடித்தாள். ஆனால் தோழிகளின் கெஞ்சல், கொஞ்சலுக்காகக் கொஞ்சமாக அலங்காரம் செய்ய அனுமதித்தாள். நீண்ட வெள்ளை நிற ஆடையும் தர்மசங்கடங்களுக்கே இடமில்லாதவாறு ஒரு ஹிஜாபும் பொருத்தமான கையுறைகளும் அந்த ஆடைக்குப் பொருத்தமாக வெள்ளை நிறத்தில் ஒரு நிகாபும் வெள்ளை ரொஜாக்களாலான செயற்கை மலர்ச்செண்டும் என இளவரசி போலவே அங்கு அமர்ந்திருந்தாள் ரூஹி.
'ஒவ்வொரு பெண்ணும் இளவரசிதானே..?'
ஷக்கூரா அவளைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவளைக் கட்டிப் பிடித்தவாறு,
"ஹேய்.. மாஷா அல்லாஹ்! நீ ரொம்ப அழகா இருக்க. யாரும் கண்ணு வச்சுடாம இருக்கனும்" என்றவாறு கன்னத்தில் முத்தமிட்டாள். ரூஹியும் அதனைத் திருப்பிக் கொடுத்தவாறு,
"நீயும் தான்" என்றாள் சிரித்துக்கொண்டே..
மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு செல்வதற்கென மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு நவீன ரக கார் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ரூஹி முதலில் அந்தக் காரில் குறிப்பிட்ட சிலருடன் அனுப்பி வைக்கப்பட, அதன்பின் ஒவ்வொருத்தராகக் கிளம்பிச் சென்றனர்.
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••