கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு..
"உம்மீ.." என்றவாறு அவளைப் பிடித்திருந்த அஹ்மதின் கையை விட்டுவிட்டு ஓடிவந்து ரூஹியின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் அய்மன். அன்றுதான் அவள் முதன்முதலாக பாலர் பாடசாலைக்குச் சென்று வந்திருந்தாள். தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முதல்நாள் நர்சரி பற்றி ஹோ.. வெனச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
"ஷக்கூ மாதிரியே ஒரு பெரிய்ய வாய் உனக்கு.." என்று செல்லமாக அய்மனின் கன்னத்தில் ரூஹி தட்ட, அந்தச் சுட்டி முகம் 'பும்' என்றானது. ரூஹியுடன் கோபமாம்! அந்த நேரம் பார்த்துத் தன் ஆறுமாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவ்விடம் வந்தாள் ஷக்கூரா. அவள் அன்றுதான் ஒரு வாரத்திற்குப் பிறகு தன் மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்தாள்.
"ஐய்.. ஷக்கூ மா.." என்று ரூஹியிடமிருந்து அய்மன் பாய்ந்து செல்ல, ஷக்கூராவிடமிருந்து தல்ஹாவை வாங்கிய ரூஹி,
"ஷக்கூ.. பேசாம நீ அய்மன எடுத்துக்கோ. நான் இவனை வச்சு பார்த்துக்குறேன். நீ இங்க இல்லாதப்போ இவளை சமாதானப்படுத்துறதே பெரிய வேலையா இருக்கு. இவ உன்னை மாதிரியே இருக்கா. நீ இல்லாத குறைகூட எங்களுக்குத் தெரியுறதில்ல" என்று சிரித்துக் கொண்டே சொல்ல,
"ஓ.. அதுக்கென்ன? என் செல்லக்குட்டிய நானே கூட்டிட்டு போயிட்றேனே. அவளுக்கும் நான்தான் விருப்பமாம். இல்ல அய்மன்??" என அய்மனை முத்தமிட்டபடிக் கேட்டாள் ஷக்கூரா.
ஷக்கூராவும் அய்மனும் ஏதேதோ பேசிக் கொஞ்சிக் கொண்டே அய்மனின் யூனிஃபார்மை மாற்றுவதற்காகச் செல்ல, சிணுங்கத் தொடங்கிய ஷக்கூராவின் குழந்தையை ஆட்டியவாறு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள் ரூஹி.
வைத்தியசாலையில் தன்னருகே சிறிய கம்பித் தொட்டிலில் தன் ரோஜா நிறப் பிஞ்சுக் கால்களை உதைத்தவாறு தன் மழலை மொழியில் ஏதோ முனகிக் கொண்டிருந்த தன் குழந்தை அய்மன் பிறந்ததிலிருந்து ரூஹியின் உலகம் அவளானாள். அவர்கள் வீட்டுக்கு வந்த அந்தப் புது உறவு, தன்னுடனேயே சந்தோஷத்தையும் கொண்டுவந்தது.
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••