நாட்கள் நகர்ந்தபடி இருந்தன.
ஒரே இடத்திலே அடைந்துபோய் இருப்பது ரூஹிக்கு போரடித்தது. சமையலும் அவளுக்கு மட்டுமே செய்ய வேண்டி இருந்ததால் அதிலும் நேரம் போகவில்லை. இம்ரான் தன்னை எங்கேயாவது வெளியே கூட்டிச் செல்வான் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே கைகூடி வந்தது. அதனால், இம்ரானின் அனுமதியோடு பக்கத்துவீட்டுப் பெண்மணியுடன் ஓரிரு முறைகள் சந்தைக்கு, கடைகளுக்கு என சென்று வந்தாள். ஷக்கூராவும் அஹ்மதும், "அது வேண்டும், இது வேண்டும்" எனக் கேட்பவற்றையெல்லாம் வாங்குவதிலேயே கடையில் நேரம் சென்றது அவளுக்கு.
சாதாரணமாக ஒரு ஆடை அணிந்து, ஹிஜாபை சுற்றிக்கொண்டு வரும் அந்தப் பெண்மணி, தன்னுடன் முழுவதுமாக மூடி, கண்கள் மட்டும் வெளியே தெரியும் ரூஹியுடன் செல்வது அவருக்கு ஒரு மாதிரியாக இருந்ததோ என்னவோ.. நாளடைவில் அபாயாவுக்கு மாறியிருந்தார். ரூஹியும் இதைக்கண்டு புன்னகைத்துக் கொண்டாள்.
ஓரிரு தடவைகள் நகரத்தின் நூலகத்திற்கும் சென்றுவந்தாள். அங்கு சிறிதளவு நேரமே செலவிட முடியுமாக இருந்ததால் ஒவ்வொரு தடவையும் அங்கு சென்று வரும்போது கவலையுடன்தான் வருவாள்.
இப்படியே ஒரு மாதம் ஓடிவிட்டிருந்தது.
அமெரிக்காவிற்கு வந்ததில் இருந்து சுமார் பத்து புத்தகங்கள் அளவில் வாங்கி, வாசித்து முடித்திருந்தாள். இம்ரான், செலவு செய்வதில் கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை. அதனால் அவளுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வெளியே செல்லும்போது வாங்க முடிந்தது. ஆனால், அவன் தன்னுடன் நேரம் செலவிடாமல் தன் தொழிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தியமை ரூஹிக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்து, சுவாரசியமாக நேரம் செலவிட முயன்று கொண்டுதான் இருந்தாள். இன்னும் ஒரு மாதம்தான். அதன்பின் தாய்நாடு சென்றுவிடலாம். ஆனால்.. ஆன்ட்டியைப் பிரிந்து செல்லவேண்டி இருக்கும் என்பதை நினைக்கும்போது மனது சற்று பாரமானது. அந்தப் பெண்மணி அவளிடம் ஒரு சொந்த சகோதரியைப் போன்று மிகவும் நெருக்கமாக இருப்பதால்தான் இது..
YOU ARE READING
முகில் மறை மதி ✔
Short Story#1 ••• அந்த இரு விழிகள்.. நிகாபின் துவாரத்தினூடாக ஒளி வீசுகின்ற அந்தக் கண்கள் அவனுக்கும் என்றோ மிக மிகப் பரிச்சயமானவையாக இருந்தன. அந்த இரு விழிகளும் கூட அவனைப் பார்த்ததும் சற்று அதிர்வடைந்தன. •••