அத்தியாயம் 21

156 20 44
                                    

இன்றோடு அமெரிக்காவுக்கு விடைகொடுக்கப் போகிறாள் அனம் ரூஹி.

ஆம்.

அமெரிக்காவின் விமான நிலையத்தில் தாய்நாட்டுக்கான விமானத்திற்காகக் காத்துக்கொண்டு வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தாள். இம்ரான் தன்னை வழியனுப்பி வைக்க வரவில்லை என்றாலும் தனியாகச் சென்று பழக்கமில்லாத தன்னுடன் வராதது அவளுக்கு சற்று பயத்தைக் கொடுத்தது. அவன் ஆஃபிஸ் போக வேண்டுமாம்.  ஏதோ ஆளரவமற்ற தீவிலே கொண்டு போய் விடப்பட்டது போலிருந்தது அவளுக்கு. அலுப்பாகவும் இருந்ததனால் ஒரு புத்தகத்தை வாசிக்கலாமெனக் கைப்பையைத் துளாவ, அவள் மறதியிலும் பரபரப்பிலும் எந்தப் புத்தகத்தையும் கைப்பையில் எடுத்து வந்திருக்கவில்லை. இனி சும்மா காத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் என எண்ணியவாறு கடந்த மூன்று நாட்களாக நடந்தவற்றை மனதில் இரைமீட்டத் தொடங்கினாள்.

- - -

தான் அமெரிக்காவிலிருந்து சென்றுவிடப் போவதால் பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம் விடைபெறுவதற்காக சென்றிருந்தாள் ரூஹி. அந்தப் பெண்மணிக்கோ தாங்கொணா சோகம். ஏனெனில் அவர் அங்கிருந்ததற்குப் பக்கத்தில் உறவென்று கிடைத்தது ரூஹி மட்டுமே. அவரிடம், தான் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்வதாக மட்டுமே கூறினாள். ஏனெனில், நடந்தவற்றைக் கூறி இம்ரான்மேல் எவருக்கும் தப்பபிப்ராயத்தை உண்டுபண்ணுவது ஒருக்காலும் அவளது எண்ணமாக இருந்ததில்லை.

"மறுபடியும் அமெரிக்காவுக்கு வந்தா மறக்காம இங்க வருவ தானே?" என ரூஹியைக் கட்டியணைத்தபடி வினவினார். அவளும் தான்தான் இங்கு வரப்போவதில்லையே என மனதில் நினைத்தவாறு அவரிடம் ஆமெனத் தலையசைத்தாள். தான் நேரங்கடத்துவதற்காக செய்த எம்ப்ரய்டரி வேலைகளில் நன்றாக இருந்த இரண்டை அவரிடம் ஞாபகார்த்தமாகக் கொடுத்துவிட்டு, அவரிடம் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். அந்தப் பெண்மணியின் குழந்தைகள் மூன்றும் இவளிடம் கொஞ்சும் மழலைத் தமிழில் வளவளத்துக் கொண்டே இருக்க, அவர்களைவிட்டு வரவும் அவளுக்கு மனதே இல்லை. கனத்த இதயத்துடன் அவர்களுக்கு முத்தமிட்டுவிட்டுக் கையைத்தபடி வெளியேறினாள். அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணியும் ரூஹியைப் போல சிலோனைச் சேர்ந்தவர்தான். இந்தியாவில் மணம் புரிந்தவரின் கணவர் அமெரிக்காவில் வேலைக்கென செல்ல, அமெரிக்காவில் செட்டிலாகியதாக இவளிடம் ஒருமுறை கூறியிருந்தார்.

முகில் மறை மதி ✔Tahanan ng mga kuwento. Tumuklas ngayon