அத்தியாயம் 10
கல்யாண முகூர்த்த நேரம் நெருங்க ''பொண்ணை அழைச்சுண்டு வாங்கோ...'' ஐயர் தன் பங்குக்கு குரல் கொடுத்தார். நிலா அழைத்து வரப்பட்டாள். அக்ஷய் மண கோலத்தில் அமர்ந்திருந்தான். புகையாலும் ஐயர் ஓதும் மந்திரங்களாலும் கடுப்பு ஏறிப்போய் இருந்தான்.
''ரொம்ப பொருத்தமான ஜோடி..! பிள்ளைவாள் உங்களுக்கு வாய்ச்சிருக்கும் பொம்மனாட்டி சாட்சாத் அம்பாள் விக்கிரகம் போலிருக்கா....'' ஐயர் அக்ஷயிடம் கூற,
''என்னத்தை பார்க்குறது? யோவ் முதல்லே உன் புகையை குறை!'' என சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் விழிகள் விரிந்து எதிரே வந்து கொண்டிருந்த நிலாமேல் நிலை குத்தி நின்றது.
''நான் கற்பனை செய்து வைத்திருந்த நிலாவோட உருவம் தானா இது? நான் மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே நிலா தானா?'' அவனால் நம்ப முடியவில்லை.
நிலவு மகளே இறங்கி வருவது போலிருந்தது. அவனுக்குள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்க ரெடியாகிக்கொண்டிருந்தது. ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர்கள் பால் ஈர்க்கப்பட வேண்டுமானால் முதலில் அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அக்ஷய் சிந்தித்தவனாக நிலாவின் விழியோடு தனது விழிகளை கலக்க முயற்சி செய்து தோற்றான்.
நிலா குனிந்த தலை நிமிரவே இல்லை. நிலாவின் உருவத்தை நேற்று விமர்சித்ததுக்கு மனசார அவளிடம் மன்னிப்பு கேட்டான். தாலிகட்டி ரிசப்சன் முடிந்து வந்தவர்கள் விடைபெற்று கொண்டிருந்தனர்.
''ராமநாதா..! பரவாயில்லையே உன் பொண்ணுக்கும் வாழ்க்கை அமைஞ்சுடுத்து..'' என சிலர் அவரது காதில் கிசுகிசுத்துவிட்டு போனார்கள்.
''ஏன் கங்காதரா..! உனக்கு வேறு பொண்ணே கிடைக்கலையா?'' என்று கங்காதரனின் காதை கடித்தவர்களும் உண்டு. அக்ஷயிடம் ஒருவர் வந்து,
''மிஸ்டர் அக்ஷய்! யு ஆர் வெரி லக்கி மேன்.'' என்று பூடகமாக சொல்ல விஷயம் தெரியாத அவனும் சந்தோஷமாக கைகுலுக்கி நன்றியை தெரிவித்துக்கொண்டான்.
நிலாவோ எந்தவிதமான உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதரணமாகவே இருந்தாள். அவளது மௌனத்தை பார்த்து வெட்கபடுகிறாள் என நினைத்தவனாக,
''வாவ்..! வெட்கப்படும் ஒரு பெண்ணை இதோ என்னருகில் பார்க்கிறேன் முதல் தடவையாக'' என மனதுக்குள் ஆச்சர்யப்பட்டவனாக அவளது கரங்களுக்குள் தனது கரங்களை ஆசையுடன் கோர்த்துக்கொண்டான்.
(Coming)
YOU ARE READING
நிலாவே வா...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் பதிப்பகத்தில் 2010 இல் வெளியான நாவல் யூனிவர்சிட்டி படிச்சிட்டு இருக்கும் போது கண்ணில பட்ட ஒரு செய்தி தாளின் சிறு பொறி தான் இந்த மாறுபட்ட நாவல் தோன்றிய பின்னணி... எனது நாவல்களில் இந்த நாவல் நாயகன் நாயகிக்கும் இடையில் டயலாக்ஸ் வெறும் ஒரு ப...