தினமும் காலை எழுந்ததும் பக்கத்து வீட்டை நோக்கி தான் கௌசிக்கின் பார்வை செல்லும்.
திவ்யா பெரும்பாலும் மாடிப்படியில் அமர்ந்தபடி டீ குடித்துக் கொண்டிருப்பாள். சில நேரங்களில் ஆதியும் அவளுடன் இருப்பான்.
வீட்டின் வேலையின் போது ஆதியுடன் அதிக நேரம் செலவிடுவான் கௌசிக். தன்னுடைய தொழில் முயற்சியால் இப்போது அது முடிவதில்லை.
திவ்யாவையும் ஆதியையும் பார்த்த பிறகே கௌசிக்கின் நாள் தொடங்கும். ஒருநாள் காலையில் தாமதமாக எழ நேர்ந்த போது கூட.. திவ்யா வீட்டில் இருந்து வெளியே வரும்வரை காத்திருந்து பார்த்தான்.
திவ்யா எத்தகைய பிரச்சனையில் இருந்து மீண்டிருக்கிறாள்.. அதனால் அவள் நலமாக இருக்கிறாள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவே அவளை பார்ப்பதாக எண்ணிக் கொண்டான் கௌசிக். ஆனால் அது அவன் மனதுக்கு நெருக்கமான பழக்கம் ஆகிவிட்டது.
சுபா வசீகரனிடம் திருமணம் குறித்து பேச தொடங்கிய போது.. நல்ல விஷயம் என்ற எண்ணத்துடன் தான் கேட்க தொடங்கினான் கௌசிக்.
ஆனால் திவ்யாவின் பெயர் வந்ததும் அவன் மனதில் ஒரு வலி பரவியது. “ஏன்.. இந்த வலி.. திவ்யாவுக்கு நல்லது நடந்தால் சந்தோஷம் தானே பட வேண்டும்.. பிறகு ஏன் எதையோ இழந்தது போல் உணர்கிறேன்..” என தன்னைத்தானே கேட்டுக் கொண்டவனுக்கு அதற்கான விடையும் கிடைத்தது.
திவ்யா மீது நேசம்.. எப்போதிருந்து.. தெரியவில்லை.. ஆனால் அதை உணரும் முன்னரே அவளையே இழக்கப் போகிறேனா.. ஏன் இந்த நிலை.. தவிப்புடன் வசீகரனை பார்த்தான் கௌசிக்.
சுபாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய வேலையிலே கவனமாக இருப்பது போல காட்டிக் கொண்டிருந்தான் வசீகரன்.
சுபா இதுகுறித்து இப்போது பேசியிருக்க வேணடாமோ.. வசீகரனின் இந்த வேலை அலைச்சல் எல்லாம் ஓய்ந்த பிறகு பேசியிருக்கலாமோ.. என சுரேந்தர் யோசித்துக் கொண்டிருந்தான்.
