“திவ்யா என்ன பண்றாடா.. கல்யாணி அண்ணி எப்டி இருக்காங்க..” என அங்கிருந்து திரும்பி வந்த வசீகரனிடம் கேட்டார் ரேவதி.
“அத்தை இன்னும் கவலைப்பட்டுட்டு தான் இருக்காங்க.. திவ்யா வேலைக்கு கிளம்பிட்டா..”
“இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்டில இருக்கலாம்ல..”
“எதுக்கு.. அவளை பார்த்து பார்த்து அத்தை இன்னும் அழுறதுக்கா..”
“அப்டி இல்லைடா..”
“விடுங்க ம்மா.. அவ சமாளிச்சுப்பா.. வீட்டிலே இருந்தா அவ அத்தையை பார்க்கிறதா.. ஆதியை பார்க்கிறதா.. அத்தை அழுறத பார்த்து ஆதியும் அழுதுட்டே இருக்கான்..”
“சரிடா.. நீ சாப்பிடு.. சாப்பிட்டு கடைக்கு போ.. அப்பா வர சொன்னாங்க..” என்றார் ரேவதி.
சரியென்ற வசீகரனும் கடைக்கு கிளம்ப தயாரானான்.
சுபா திருமணம் முடிந்ததுமே வசீகரனுக்கும் திருமணத்தை நடத்தி முடிக்கவேண்டும் என ஆசைப்பட்டனர் சந்திரசேகரும் ரேவதியும்.
அப்போது சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்த்த மானசாவை விரும்பினான். அவளும் விரும்பினாள்.. பொழுதுபோக்காக.
முந்தைய நாள் வரை.. தன்னுடன் காதலி என்ற உரிமையுடன் கலகலப்பாக பேசி சிரித்தவள்.. தன்னுடைய கல்யாண பத்திரிக்கையை நீட்டிய போது அதிர்ந்து போனான்.
இதெல்லாம் சகஜம்.. என்பது போல அவள் எளிதாக கடந்து சென்றுவிட.. அவள் நினைவிலிருந்து வெளியேறுவதற்காக வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கே வந்திருந்தான் வசீகரன்.
சந்திரசேகரும் ரேவதியும் முதலில் கல்யாண பேச்சை எடுத்ததும் மானசாவிடம் பேசிவிட்டு முடிவை சொல்லலாம் என எண்ணி கொஞ்ச நாள் போகட்டும் என மறுத்தான் வசீகரன்.
ஆனால் அவள் பிரிவுக்கு பின்னர் திருமணம் என்ற பேச்சே கசந்தது.
சந்திரசேகர் அந்த ஊரில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இப்போது அவருக்கு உதவியாக இருந்தான் வசீகரன். வருமானம் குறைந்துவிட்ட போதிலும்.. மனதில் நிம்மதி இருப்பதாக தோன்றியது அவனுக்கு.
