திவ்யாவின் பிரச்சனை என்னவென அறியும் முன்னர் வரை.. வசீகரன் மனதில் திவ்யா இருப்பாளா.. அவன் முடிவு திவ்யாவை திருமணம் செய்து கொள்வது என இருந்தால்.. தான் திவ்யா மீது கொண்டிருக்கும் நேசம்.. மனதிற்குள்ளே புதைந்து போகுமா.. என தவித்துக் கொண்டிருந்தான் கௌசிக்.
ஆனால் திவ்யாவின் செயலை பார்த்த போது.. அவனுள் எழுந்த தவிப்பு.. அதையெல்லாம் சிந்திக்க விடவில்லை.
திவ்யா.. திவ்யா.. அவள் தவிப்பு.. குழந்தையை சுமக்க விடாமல் அவளிடம் இருந்த உறுத்தல் அதை சரி செய்ய வேண்டும்.. என மட்டுமே நினைத்தான் கௌசிக். தன் மனதில் இருப்பதை வெளிப்படுத்தியும் விட்டான்.
திவ்யா இருந்த மனநிலையில் குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் தலைதூக்க.. தவறிழைக்க துணிந்து விட்டாள். ஆனால் கௌசிக் சரியான நேரத்தில் காப்பாற்றியதும் தான்.. தன் தவறை உணர்ந்தாள்.
செய்ய இருந்த தவறை உணர்ந்தாலும் மனதில் ஏதோ ஒரு உறுத்தல் அந்த குழந்தையை சுமப்பதில்.
கௌசிக் கோபமாக கேட்ட போது குற்றவுணர்ச்சியில் அழுகை வந்துவிட்டது. ஆனால் தவிப்புடன் அவள் கண்ணீரை துடைத்து கௌசிக் அக்கறையாக கேட்டபோது.. தன் மனதில் இருக்கும் உறுத்தலை சொன்னாள் திவ்யா.
கௌசிக் அதை சரிசெய்யும் வேகத்தில் தன் மனதை வெளிப்படுத்தினான். அவன் சொன்னதன் அர்த்தத்தை உணரவே திவ்யாவுக்கு சில நொடிகள் ஆனது.
கௌசிக்கை பார்த்தாள். அவன் பார்வை அவள் கரங்களுக்குள் இருந்த அவன் கரத்தின் மீதிருந்தது.
அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தமும் அவன் பார்வையில் இருந்த உண்மையும் புரிந்தது. ஆனால்.. சட்டென்று விலகினாள் திவ்யா.
தன் பிரச்சனையை தானே சரிசெய்து கொள்ளாமல் அவனிடம் உரிமை எடுத்துக் கொண்டது தான் அவனை இப்படி பேச வைத்ததா.. தன்னையே கேட்டுக் கொண்டாள்.
அவன் குரலும்.. அவன் கண்களும் பொய்யுரைக்கவில்லை என புரிந்தாலும்.. திவ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
