திவ்யாவுக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்திருந்த ஆறுமுகம் பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் கடையை நடத்தி வந்தார்.
ஆறுமுகம் குடும்ப நண்பர் என்பதால் வாடகை வசூல் செய்வதில் இதுவரையில் எந்த பிரச்சனையும் இருந்ததில்லை.
கோவையில் வேலை செய்து வந்த அவர் மகன் அங்கேயே சொந்தமாக வீடு வாங்கியிருக்க.. அங்கு செல்லும் முடிவில் இருந்தார் ஆறுமுகம்.
கடையில் இருக்கும் பொருட்களில் சிலவற்றை வாங்கியவர்களிடமே திருப்பிக் கொடுத்தார். சிலர் திருப்பி வாங்காததால் இன்னமும் பொருட்கள் மீதமிருந்தன.
அதையும் வேறு யாருக்காவது விற்று விட்டாவது அடுத்த மாதமே செல்வதாக இருந்தார் ஆறுமுகம். அதனால் கடையை காலி செய்வது குறித்து முன்பே திவ்யாவிடம் கூறியிருந்தார்.
வேறு நம்பிக்கையான ஒருவருக்கு கடையை வாடகைக்கு விட வேண்டும். ஆனால் இருந்த மன குழப்பங்களில் அதை மறந்தே போயிருந்தாள் திவ்யா.
இந்த முறை ஆறுமுகம் சொல்லவும் தான் அது நினைவுக்கு வந்து.. அதுகுறித்து வசீகரனிடம் பேசிவிட்டு செல்லலாம் என கடைக்கு வந்தாள் திவ்யா.
அங்கே கௌசிக் தான் இருந்தான். திவ்யாவை கண்டதும் கௌசிக் புன்னகைத்தாலும்.. அவளால் இயல்பாக புன்னகைக்க முடியவில்லை.
கடையை பார்வையிலே அலச.. எங்குமே வசீகரன் தென்படவில்லை. கௌசிக்கிடம் கேட்கவும் முடியாமல்.. கடையில் பொருட்கள் வாங்க வந்தது போல ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினாள் திவ்யா.
கௌசிக்கிற்கு புரிந்தது.. அவள் வசீகரனை தான் தேடி வந்திருக்கிறாள் என்பது. ஆனாலும் எதுவும் பேசாமல் அவள் செய்கையை ரசித்தபடி இருந்தான்.
என்ன வாங்குவது என்றும் புரியவில்லை.. கௌசிக்கிடம் வசீகரன் குறித்து கேட்கவும் தயக்கம்.. கையில் கிடைத்த ஒன்றிரண்டு பொருட்களை எடுத்துக் கொண்டாள் திவ்யா.
“வேற எதுவும் வேணுமா..” என கடையில் வேலை பார்க்கும் பெண் அவளுடனே வர.. திவ்யா இல்லையென தலையசைத்தாள்.