தன் மகளின் வாழ்க்கை இனி நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.. கடவுளுக்கு நன்றி தெரிவிக்க கோவிலுக்கு சென்றுவிட்டு வந்தார் கல்யாணி.
கௌசிக் வீட்டில் இருந்து செல்வதை கவனித்தபடி வந்தவரின் மனம் நிம்மதியில் நிறைந்திருந்தது.
கருகிப்போன தோசையை தனியே வைத்துவிட்டு.. கல்யாணிக்காக தோசை சுட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.
அவள் முகத்தை பார்த்தே மனதின் மகிழ்ச்சியை புரிந்து கொண்ட கல்யாணி கருகிக் கிடந்த தோசையை பார்த்தார்.
“என்னடா இது.. கவனமில்லாம இருந்துட்டீயா..” என கேட்டார் கல்யாணி.
“அ.. அது வந்து ம்மா..” என திவ்யா தடுமாற.. “அம்மா.. கௌசி.. ஆ.. எனக்கு.. பாப்பாக்கு..” என கௌசிக் ஊட்டிவிட்டதை தெளிவாக சொன்னான் ஆதி.
புரிந்து கொண்ட கல்யாணி புன்னகைக்க.. அசடுவழிய சிரித்தபடியே அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள் திவ்யா.
அவள் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. கௌசிக்குடன் இருந்த சில நிமிடங்களை.. சில நிமிடங்கள் தானா.. அதையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது.
கௌசிக்கையே எண்ணிக் கொண்டிருந்த திவ்யாவுக்கு அவனுடனே இருக்க வேண்டும் போலிருந்தது.
கௌசிக்கின் அருகாமையில் தோன்றும் பாதுகாப்பு.. நிம்மதி.. அவனுடனே இருக்க வேண்டும் என்ற உணர்வு.. இதெல்லாம் கணவனான பிரதாப் மீது தோன்றியதேயில்லை. திருமணம் என்று ஆகிவிட்டதால் தான் அந்த உறவை.. அவனை.. ஏற்றுக் கொண்டாள் போல..
ஆதிக்கு பிரதாப்பை பார்த்தாலே பிடிக்காது. பிரதாப்புக்கும் ஆதி மீது பாசம் என்பதெல்லாம் கிடையாது.. அவனுக்கு பிடிக்காது என்பதை காரணம் காட்டி விலகியே இருப்பான். ஆதியிடம் பேச அவன் முயற்சித்ததும் இல்லை.
ஆனால் கௌசிக் ஆதி மீது எத்தனை அன்பாக இருக்கிறான். ஆதிக்கும் கௌசிக் என்றால் அத்தனை ப்ரியம்.. இதன் ரகசியம் தான் என்னவோ என எண்ணிக் கொண்டாள் திவ்யா.
