கௌசிக்கிடம் தன் மனதில் இருந்த உறுத்தலை மறைக்காமல் பேசியதும்.. குழந்தைக்கு அப்பாவா நான் இருந்தா குழந்தையை எந்த உறுத்தலும் இல்லாம ஏத்துப்பல்ல.. என கௌசிக் பரிதாபத்தில்.. இல்லை.. அது உண்மையான தவிப்பு.. உண்மையாக தான் கேட்டான்.
தனக்குள் குழப்பம் இருந்த போதிலும்.. தான் விலகி இருப்பதை புரிந்து கொண்டு கௌசிக் விலகி விடுவான்.. தன்னை மறந்து விடுவான் என்றே எண்ணினாள் திவ்யா. அதனாலேயே தன்னால் முடியாத போதும் விலகியிருக்க முயன்றாள். நெருங்க துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்.
"குழந்தையோட அப்பாவையும் சீக்கிரமே ஏத்துப்ப தானே.." என்ற கௌசிக்கின் குரலில் இருந்த எதிர்பார்ப்பு.. "ஏத்துப்ப.. காத்திருப்பேன்.." என்றவனின் அந்த நம்பிக்கை.. திவ்யா மனதில் இருந்த குழப்பங்களை எல்லாம் துடைத்தெறித்து விட்டது.
அவளுக்கு கௌசிக்கை பிடித்திருக்கிறது. அவன் சொன்னதை அவள் ஏற்றுக் கொள்ளவே விரும்புகிறாள். ஆனால் வேண்டாம்.. இது வேண்டாம்.. எதுவோ தடுத்தது.
இந்த சமூகம் போட்டு வைத்திருக்கும் கட்டுப்பாடுகளா.. இல்லை தனக்குத்தானே அவள் போட்டிருக்கும் வேலியா.. புரியவில்லை.. வேண்டாம் என தோன்றியது.
தன் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை கௌசிக்கிற்கு இருக்கலாம்.. ஆனால் இது சரிவராது.. அவன் வாழ்க்கை ஏன் தன்னால் வீணாக வேண்டும்.. அவன் அப்பா அம்மா என்னை ஏற்றுக் கொள்ளலாம்.. குழந்தையை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.. வேண்டாம்.. வேண்டாம்..
கௌசிக் தன் வாழ்வில் வேண்டும் என்பதற்கு ஒரே காரணமாக இருவருக்கும் பிடித்திருக்கிறது என்பது இருந்து. ஆனால் வேண்டாம் என யோசிக்கையில் இது சரிவராது.. அவர்கள் என்ன பேசுவார்கள்.. அவன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. என ஏதேதோ இல்லாத காரணங்களை கூட உருவாக்கிக் கொண்டிருந்தாள் திவ்யா.
திவ்யா தன்னை விலக நினைப்பது கௌசிக்கிற்கு புரிந்தாலும்.. ஏதோவொரு உள்ளுணர்வு அவள் தன்னை என்றேனும் ஏற்றுக் கொள்வாள் என்றது. அந்த நம்பிக்கையை தான் அவளிடமும் வெளிப்படுத்தினான்.