கோவிலில் வைத்து கிருஷ்ணன் பேசியதை யோசித்துக் கொண்டிருந்தார் மேகலா.
திவ்யா வாழ்வில் நிகழ்ந்த பிரச்சனைகள் எதிர்பாராதது.. அது தாங்கள் முதல் நாள் இந்த ஊருக்கு வந்த போது நிகழ்ந்ததும் தற்செயலானது.
இதற்காக திவ்யாவை ராசியில்லாதவள்.. அது இதுவென தான் பேசியது தவறு என்பது புரிந்தது.
ஆனாலும் எதிர்பாராமல் நடந்த அந்த நிகழ்வுகளால் அவள் மீது ஏற்பட்ட இனம் புரியாத வெறுப்பு மேகலாவின் மனதில் இருந்து முழுதாக அகலவில்லை.
தான் பேசியது தவறாக இருக்கலாம்.. ஆனால்.. திவ்யா வேறொருவன் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள். தன் மகன் கௌசிக் ஏன் அவளை மணந்து கொள்ள வேண்டும்.. வேண்டாம்.. அவனுக்கு என்ன குறை.. அவனுக்கு பெண் கொடுக்க.. யார் தான் மறுப்பார்கள்.. திவ்யா வேண்டாம்.. என்பதே மேகலாவின் எண்ணமாக இருந்தது.
வீடு.. தொழில் எல்லாவற்றிலும் சரியான முடிவெடுத்த தன் மகன்.. திவ்யா விஷயத்தில் ஏனோ தடுமாறுகிறான்.. அதை அவனுக்கு புரிய வைக்க வேண்டும்.. என எண்ணினார் மேகலா.
அன்றைய வாக்குவாதத்திற்கு பிறகு அவன் வீட்டுக்கே வரவில்லை.. அவன் வீட்டுக்கு வரட்டும் முதலில்.. அப்புறம் பொறுமையாக பேசிக் கொள்ளலாம்.. என முடிவெடுத்த மேகலா கௌசிக்கிற்கு போன் பண்ணினார்.
திவ்யா வீட்டு முன்னால் கௌசிக் பைக்கை நிறுத்த.. விடைபெற மனமின்றி அவன் கரத்தை பற்றியபடி நின்று கொண்டிருந்தாள் திவ்யா.
கௌசிக்கின் மனமும் அவளுடனே இருக்க விரும்பியது. ஆனால்.. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.
கௌசிக்கின் அலைபேசி இடைஞ்சல் செய்ய திவ்யா முகத்தில் இருந்து பார்வையை விலக்காமல் போனை எடுத்தான்.
மேகலா தான்.. அட்டெண் பண்ணாமல் சைலண்ட்டில் போட்டுவிட்டு கௌசிக் திவ்யாவை பார்க்க.. “யாரு.. எடுத்து பேசுங்க..” என்றாள்.
“அம்மா தான்..” என சொன்னான் கௌசிக்.
“பேசுங்க.. ஏற்கனவே இரண்டு நாளா நீங்க வீட்டுக்கும் வரவேயில்லை.. அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா..” என்றாள் திவ்யா அவள் மனதில் அது உறுத்தலாகவே இருந்ததால்.