மாலை வெயில் இதமாக உடலை தழுவ.. மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தான் கௌசிக்.
எத்தனை நாள் கனவிது.. சொந்த வீடு.. சொந்த ஊரில்.. அப்பாவின் பலவருட ஏக்கத்தை தீர்த்து வைக்கப் போகும் வீடு.. கௌசிக்கின் மனதில் உற்சாகம் நிரம்பியிருந்தது.
கௌசிக்கின் தந்தை கிருஷ்ணன் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் கடன் வாங்கி வீடு கட்டினார். அவரின் கெட்ட நேரமோ என்னவோ கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஆசையாக கட்டிய வீட்டையே விற்கும் நிலை வந்தது.
அந்த ஊரில் இருக்க விரும்பாமல் சென்னையில் வாடகை வீட்டில் தான் பல வருடங்களாக வசித்து வருகின்றனர் கௌசிக்கின் குடும்பத்தினர்.
“சொந்த வீடு.. அதுவும் சொந்த ஊரில.. இரண்டு பேரும் பசங்க.. நாளைக்கு அவங்க வளர்ந்ததும் அவங்க குடும்பம்னு எல்லோருக்குமானதா இருக்கணும்னு அவ்ளோ ஆசையா கட்டினேன்.. ஆனா என்னோட சக்திக்கு மீறி.. கடன் வாங்கிட்டேன்.. எப்படியாவது அடைச்சிடலாம்னு நம்புனேன்..
கடனை சமாளிக்க முடியாம.. அந்த வீட்டையே விக்கிற நிலைமைக்கு வந்துட்டேன்..
இப்டிலாம் நடக்கும்னு நினைச்சேன்.. இவனுக்கு இது தேவைதான்னு என்னை பார்த்து சிரிச்சவங்க தான் அதிகம்.. தாங்கிக்க முடியலை..
அந்த ஊரை விட்டு வந்துட்டேன்.. சம்பாதிச்சேன்.. உங்க இரண்டு பேரையும் படிக்க வச்சிட்டேன்.. ஆனா..
இன்னும் அந்த ஊருக்கு என்னால போக முடியலை.. அந்த ஊர்க்காரங்க யாரையாவது பார்த்தாக்கூட தெரியாத மாதிரி.. கவனிக்காத மாதிரி.. சொல்லப்போனா.. ஓடி ஒளிஞ்சுப்பேன்..
என்னதான் இப்ப நான் நல்லா இருக்கேன்.. என் பிள்ளைங்க நல்லா இருக்காங்கனாலும்.. அந்த ஊரில மதிப்போ மரியாதையோ இருக்காது.. கடனுக்கு வீட்டை வித்துட்டு வந்தவனு தான் பேசுவாங்க.. அங்க ஒரு வீடு இருக்கணும் சொந்தமா.. அப்பத்தான் முன்னாடி நான் பட்ட அவமானம் வலி எல்லாம் மறக்கும்..” கிருஷ்ணனின் வார்த்தைகள் கௌசிக்கின் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.
