திவ்யா கௌசிக்கிடம் தனியாக பேச வேண்டும் என்று வந்த போதே.. இருவரும் மனம்விட்டு பேச இடம் கொடுத்து வெளியேறிய வசீகரனின் மனதிலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
திவ்யா கௌசிக்கின் அன்பை புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பினான் வசீகரன்.
கௌசிக்கும் திவ்யாவும் சில நிமிட மௌனமும் சில நிமிட பேச்சுமாக தங்கள் உலகில் மூழ்கியிருந்தனர்.
வழக்கமாக பத்து மணிக்கு கடையை பூட்டி விடுவது வழக்கம். இரண்டு தினங்களாக கௌசிக் வீட்டுக்கு செல்லாததால் வசீகரன் அவனுடன் கூடுதலாக சில நிமிடங்கள் இருந்து விட்டு கிளம்பினான்.
இன்று சற்று சீக்கிரம் செல்லலாம் என நினைத்துக் கொண்டிருந்தான் வசீகரன். கௌசிக் இன்றும் வீட்டுக்கு செல்ல மாட்டேன்.. என்று சொல்லியதால்.. திவ்யாவை வீட்டில் விட்டுவிட்டு செல்ல வேண்டுமே.. என யோசித்துக் கொண்டிருந்தான்.
நேரமும் பத்தை நெருங்கிக் கொண்டிருக்க.. கடையில் வேலை பார்க்கும் மற்றொருவரும் கிளம்பிவிட.. தனியாக அமர்ந்திருந்தான் வசீகரன்.
அவர்கள் இப்போதைக்கு தங்கள் பேச்சு வார்த்தையை முடிக்க போவதில்லை.. என்பதை உணர்ந்து தானே இடையிட்டான் வசீகரன்.
"இவ்ளோ நேரமா என்ன தான்டா பேசுறீங்க.. மணி பத்தாகுது.." என தனக்குள்ளே புலம்பியபடி.. கதவை தட்டினான்.
அதன்பிறகே தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்து நிகழ்வுக்கு வந்தனர் கௌசிக்கும் திவ்யாவும்.
"வசீயா தான் இருக்கும்.. ரொம்ப நேரமாச்சு போல.." என்ற கௌசிக்.. அப்போது தான் மணியை பார்த்தான்.
கதவை தட்டிவிட்டு சில நிமிட இடைவெளிக்கு பிறகு.. உள்ளே வந்த வசீகரன்.. அழுத்தமாக இணைந்திருந்த இருவரின் கையையும் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தான்.
"கௌசி.. நீ கடையை பூட்டிடு.. நான் திவ்யாவை வீட்டில விட்டுடுறேன்.." என்ற வசீகரன் அங்கிருந்து நகர்ந்தான்.
