தானே குழந்தையை அழிக்க துணிந்த போது கூட.. அது தவறு என்பது புரிந்தாலும்.. இது அவன் குழந்தை.. அவன் அடையாளம் என்ற எண்ணம் மேலோங்கியதிலே அதை செய்ய துணிந்தாள் திவ்யா. ஆனால் கௌசிக் அந்தப் பெரும்பிழை நேராமல் தடுத்துவிட்டான்.
இது அவன் அடையாளம் அல்ல.. தன் குழந்தை என மனதில் ஆழப்பதித்துக் கொண்ட பின்.. கௌசிக் மீதான நேசத்தை உணர்ந்த பின்.. குழந்தை வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருந்தது திவ்யா மனதில்.
பிரதாப் செய்த தவறை அறிந்து விலகிய பின்னர்.. சிவாவின் இறப்புக்கு நீதான் காரணம் என குற்றம் சாட்டினானே தவிர.. அவன் மீதிருந்த தவறை அவன் உணரவேயில்லை.
இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வந்து மன்னிப்பு கேட்ட போது திவ்யாவின் மனம் இளகவில்லை. அவன் உண்மையிலே மன்னிப்பு கோருவதாகவும் தோன்றவில்லை.
இனி தன் வாழ்க்கையில் அவனுக்கு இடமில்லை என்பதில் திவ்யா உறுதியாக இருந்ததால்.. அவன் மாறினாலும் மாறாவிட்டாலும் தனக்கு பிரச்சனை இல்லை என்று கண்டு கொள்ளாமல் தான் இருந்தாள்.
ஆனால் பிரதாப் அவள் உயிரை பறிக்கும் அளவுக்கு செல்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை.
திவ்யா திடமாக பிரச்சனைகளை எதிர்கொள்வாள் என்ற போதிலும்.. பிரச்சனையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கும் அதில் இருந்து விடுபடுவதற்கும் அவளுக்கு சற்று தனிமை தேவைப்படும்.
பிரதாப் வழக்கம் போல பிரச்சனை செய்வதாக கருதி விலகிச் செல்ல முயன்றவளுக்கு.. செத்துப்போ.. என பேசியபடி கத்தியை காட்டவும் எதையும் யோசிக்க முடியவில்லை.
அவனிடமிருந்து தன்னை.. தன்னுள் வளரும் உயிரை காத்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானதாக தோன்றியது.
கௌசிக்கிற்கு பிரதாப் திவ்யாவை அடித்தது.. மேலும் துன்புறுத்த எண்ணியதெல்லாம் ஒருபுறம் கோபம் என்றால்.. இத்தனை நாட்களாக அவன் பின்தொடர்வதை திவ்யா சொல்லாதது பெருங்கோபம்.
