அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் திவ்யா. திண்ணையில் அமர்ந்திருந்த ஆதி.. “பாப்பா.. பாப்பா..” என ஓடிவந்து அவள் கரம் பற்றிக் கொண்டான்.
அவன் உற்சாகம் கண்டு உடலின் சோர்வு தொலைந்து புன்னகையோடு “அம்மா.. எங்க ண்ணா..” என்றாள் திவ்யா.
“அம்மா.. அங்க.. அங்க..” என வீட்டுக்குள் கைகாட்டினான் ஆதி.
அப்போது பைக் சத்தம் கேட்டு திவ்யா திரும்பி பார்க்க.. கௌசிக்.. நின்றிருந்தான். சில நாட்களாக இது நடக்கிறது. திவ்யா வேலை முடிந்து வரும் வேளை.. கௌசிக்கும் வீட்டுக்கு வருகிறான்.
நேற்று கூட பூர்ணிமா சொல்லிக் கொண்டிருந்தாள். “மதியம் சாப்பாட்டுக்காவது வரலாம்ல.. இது என்ன சாயந்திரமா வர்றனு கௌசிக் கிட்ட அத்தை கேட்டாங்க.. இந்த டைம்லதான் எனக்கு வரமுடியுது.. அப்டினு சொல்லிட்டாங்க..
என்னமோ இருக்குது.. என்னனு தான் புரியலை..” முதலில் அவள் பேச்சை கேட்ட போது எதுவும் தோன்றவில்லை. ஆனால் இப்போது புரிந்தது திவ்யாவுக்கு. அவளை பார்க்கத்தான்.. சரியாக அந்த நேரத்திற்கு வருகிறான் போல.
உள்ளுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி பரவியது. ஏன் இந்த மகிழ்ச்சி என சிறு எரிச்சலும் மூண்டது.
“கௌசி.. கௌசி..” என்றவாறு ஆதி அவனிடம் ஒட்டிக்கொண்டு ஏதோ ரகசியம் பேசினான்.
கௌசிக்கும் சிரிப்புடன் ஐஸ்கிரீம் ஒன்றை எடுத்துக் கொடுக்க.. “பாப்பா.. ஐஸ்கிரீம்.. ஐஸ்கிரீம்..” என குதூகலமாக சாப்பிட ஆரம்பித்தான்.
“உனக்கு கிடையாது.. தரமாட்டேன்..” என அவன் குழந்தை போல செய்ய.. புன்னகையுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
வீட்டுக்கு தேவையான சில பொருட்களை கொண்டு வருமாறு கல்யாணி கௌசிக்கிடம் சொல்லியிருந்தார். அதை திவ்யாவிடம் நீட்டியவன்.. “அம்மா கேட்டாங்க..” என்றான்.
அதை வாங்கிக் கொண்ட திவ்யா.. அங்கே வந்த கல்யாணியிடம் அதை கொடுத்துவிட்டு.. பில்லை பார்த்துவிட்டு பணத்தை எடுத்து கௌசிக்கிடம் கொடுத்தாள்.
