பள்ளிக்கு சென்று வேலையில் கவனத்தை செலுத்த முயன்ற போதும் முடியாமல் தவித்தாள் திவ்யா. மனமெல்லாம் ஒருவித இன்பம்.. விவரிக்க முடியவில்லை.
காலையில் கௌசிக் வீட்டில் சுபாவின் குழந்தை அஜீஷை கொஞ்சிக் கொண்டிருக்கையில் தங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை எண்ணிப்பார்த்தாள்.
“என்ன திவ்யா உடனே கிளம்புற.. இன்னைக்கு லீவு போடலாம்ல..” என்றாள் சுபா.
“இல்லை சுபா.. கொஞ்சம் வேலை இருக்கு.. மதியத்துக்குள்ள முடிச்சிட்டா நல்லா இருக்கும்.. அதான்..”
“அப்டினா மதியத்துக்கு மேல இங்க வந்துடேன்..” என ஆவலாக கேட்டாள் சுபா.
“இல்லைடா.. இன்னைக்கு ஊருக்கு போகணும்.. இரண்டு மூணு நாளா அம்மா வீட்டிலே தான் டேரா.. அதான் இன்னைக்காவது அங்கே போகணும்..”
“போ.. எப்பவாவது ஒன்னா இருக்க டைம் கிடைக்கு.. அன்னைக்கும் என்கூட இருக்காத..” செல்லமாக கோபம் கொண்டாள் சுபா.
“லூசு.. அதான் ஒரே ஊர்ல தான இருக்கோம்.. நினைச்சா உடனே பார்த்துக்கலாம்.. அப்புறமென்ன..”
“ம்ஹூம் அதெல்லாம் இல்லை.. நீ இன்னைக்கு என்கூட தான் இருக்கணும்..” குழந்தை போல அடம்பிடித்தாள் சுபா.
“மாமனார் மாமியார் நாத்தனார்னு யார் தொந்தரவும் இல்லாம சுரேன் அண்ணா கூட டைம் ஸ்பெண்ட் பண்றதை விட்டுட்டு என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனுமாம்.. ஆளுகளை பாரு..” கேலியாக சொன்னாள் திவ்யா.
“ஆஹான்.. இப்ப புரிஞ்சிடுச்சு.. பிரதாப் அண்ணனை பார்க்கணும் உனக்கு.. அவ்ளோதான.. நீ கிளம்பு..” என திவ்யாவை கிண்டல் செய்தாள் சுபா.
மறுக்க தோன்றினாலும்.. அவள் கேலியில் முகம் சிவந்தாள் திவ்யா. சுபாவிடம் இருந்து தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றானது திவ்யாவுக்கு.
அப்பா உயிருடன் இருந்தவரையில் திருமணம் பற்றி இயல்பாக எல்லோருக்குள்ளும் இருக்கும் கனவுகள் திவ்யாவுக்கும் இருந்தது.
