"உதிரா" என்ற விஜயேந்திரனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் எதுவும் வரவில்லை. மூன்று ஆண்டுகளாக சிறைப்பறைவையாக ஒரு இளம் பெண் இருக்க வேண்டுமென்றால் அதுவெல்லாம் கொடுமை அல்லவா? உதிரா பெற்றோர் இறந்துவிட்டாலும் அவளின் உறவுகள் அவளுக்கு பொய்த்து போகாமல் இருந்தார்கள். அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, அவர்களின் பிள்ளைகள் என்று இவளுக்கு எல்லோரும் இருந்தார்கள். ஆனால் இவள்தான் அவர்களைவிட்டு விலகியே இருக்க நினைத்தாள்.
இவளுடைய சித்திக்கு ஆண் ஒன்றும், பெண் ஒன்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கு திருமண பேச்சுக்கள் வரலாம். அப்போது இவளின் வாழ்க்கை அதுக்கு குறுக்கே வந்துவிட கூடாது என்றெல்லாம் இவள் யோசித்தாள். ஆனால் அங்கு அவர்கள் அப்படி எதுவுமே யோசிக்கவில்லை. இவளுக்கு கிடைக்காத எந்த சந்தோசமும் நமக்கு வேண்டாம் என்று இதுவரை அவர்கள் எந்த சுபகாரியத்தையும் நடத்தியது இல்லை, திருவிழா போன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டது இல்லை, தீபாவளி, பொங்கல் என்று எந்த பண்டிகையும் கொண்டாடியதில்லை.
'எங்கள் வீட்டு பெண்ணுக்கு கிடைக்காத எந்த சந்தோசமும் எங்களுக்கு வேண்டாம்' என்று சொல்லும் ஒரு குடும்பத்தையாவது கடவுள் கொடுத்திருக்கிறாரே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இல்லாததை நினைத்து வருந்திக்கொண்டே இருப்பதில் என்ன லாபம். இந்த மாதிரியான பக்குவம் எல்லாம் உதிராவுக்கு இருந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஜெயிலில் இருந்து வெளியே வந்த உதிரா மிகவும் அமைதியாக இருந்தாள். விஜயேந்திரன் மட்டும்தான் வந்திருந்தான் அவளை அழைத்துச்செல்ல. அவள் இவனை மட்டும்தான் வர சொல்லியிருந்தாள்.
இவள் வீட்டுக்குள் சென்ற போது அந்த வீடே களையிழந்து காணப்பட்டது. அனைவரின் முகத்தில் வருத்தம், துன்பம், வேதனை இவள் நிலையைப்பார்த்து. தன் தாய் சாயலில் இருந்த தனது சித்தியை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த அமைதி இவளுக்கு காணாமல் போனது. சித்தியை இவள் ஒரு நாளும் சித்தி என்று அழைத்ததே இல்லை. தாயின் மறுவுருவம் என்றுதான் நினைப்பாள். அதனால் தன் தாயை பார்த்தது போல சித்தியை கட்டிக்கொண்டு மூன்று ஆண்டுகள் தான் அனுபவித்த வேதனை எல்லாவற்றையும் கொட்டி தீர்த்துவிடுவது போல கதறி அழுதாள். அவள் மட்டுமல்ல, அந்த குடும்பமே அழுதது. இவளை யாரும் தடுக்கவில்லை. அவள் மனம் பாரம் போகும் வரை அழுது தீர்த்தாள்.