அத்தியாயம் - 6

946 51 6
                                    

"ஏஜே உன் சண்டையை இத்தோடு விட்டுடு.  அதான் நீ என்ன கரைஞ்சாலும் அந்த போலீஸ்காரன் கண்டுக்காமல் இருக்கானே! அப்புறம் நீ குரைச்சுத்தான் என்ன செய்ய?" என்றாள் ஊர்மி. 

"என்னடி கொழுப்பு கூடி போச்சா? கரையுற, குரைக்குறன்னு உன் சொந்தக்காரங்களை பற்றியெல்லாம் பேசிட்டு இருக்க.  அவங்க எல்லாம் உன் சொந்தம்.  அவங்களை ஏன் நம்ம பேச்சுக்கு இடையே இழுக்க." என்றாள் ஏஜே.  

"ஆமாம் அத்தனையும் என் சொந்தம்தான்.  ஆனா நீ இப்போ யாருக்கு சொந்தமாக இந்த வேலையை எல்லாம் பார்த்துட்டு இருக்க.  எதுக்காக அந்த ஆளுட்டையே உரசிட்டு போற.  அவன்தான் உன்னை திரும்பி கூட பார்க்கமாட்டேங்கிறானே!" என்றாள் ஊர்மி.  

"அதுக்குத்தான் அவனுக்கு இத்தனை அடி.  என் முகத்தை பார்க்க மாட்டானாம்.  இப்படியே இன்னும் கொஞ்ச நாள் அவன் திமிரு காட்டிட்டு அலையட்டும், அவனை நான் என்ன செய்யுறேன்னு பாரு.  அவன் காக்கி சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்." என்றாள் ஏஜே.  

"அவனை சட்டை இல்லாமல் பார்க்க அவ்வளவு ஆசையா?" என்று ஊர்மி கேட்டுவிட்டு அவளின் முறைப்பை பார்த்துவிட்டு 

"காக்கிச்சட்டையை சொன்னேன்.  வரட்டாஆஆஆஆஆஆ" என்று ராகம் இழுத்துக்கொண்டு போனாள் வடிவேலு மாதிரி.  இன்னும் இவள் பக்கத்தில் இருந்தால்  பார்த்தே எரித்து விடுவாள் என்று.  

ஏஜே அந்த மனநிலையுடன்தான் இருந்தாள்.  தன்னை உதாசீனம் செய்கிறவனை எதாவது செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தாள். அதற்காக அவள் கையில் எடுத்த ஆயுதம்தான் உதிரா.  உதிராவைப்பற்றி தெரியாமல் யாரும் இருக்க முடியாது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக போராடி, குற்றவாளிக்கு தன் கையால் தண்டனை கொடுத்து, சட்டத்தின் முன் அதை தைரியாமாக சொல்லி தான் செய்த கொலைக்கு தண்டனையும் பெற்றுக்கொண்டாள்.  ஆனால் ஜெயிலில் முடிந்து போனது இல்லை தண்டனை.  இனிதான் அவளுக்கான தண்டனை இந்த சமுதாயத்தில் காத்திருந்தது. அதை அறியாமை குணம் கொண்ட மனிதர்கள் சொன்னால் கேட்டுக்கொண்டு 'மூடர்கள்' என்று சும்மா இருக்கலாம்.  ஆனால் 'பெண்ணுக்கு பெண்ணே எதிரி' என்பது போல ஏஜே இதை கையில் எடுத்தாள் விஜயேந்திரனை தட்டி எழுப்ப.  எழுந்தவன் சும்மாவா இருப்பான்.  அவனுக்கு உயிரே அவன் மாமன் மகள்தான்.  அவளுக்காக இந்த வேலைக்கு வந்தவன்.  அவனிடம் போய் இந்த வேலையை இந்த ஏஜே பார்த்திருக்க வேண்டாம்.  

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Where stories live. Discover now