"உதிரா இப்படியெல்லாம் யோசிக்க நீ எங்கே கத்துகிட்ட? அவ ஒரு அக்யூஸ்ட். அவ கையை பிடிக்கிறது என் வேலை. விட்டா அவ ஓடியே போயிருப்பா. அதான் பிடிச்சு வச்சேன். நேத்து பார்த்தல, அவ செய்த வேலையை. அது வாலு இல்லாத வானரம். ஒன்னு கத்திட்டே இருக்கும், இல்ல திட்டிட்டே இருக்கும். இது இரண்டுமே இல்லன்னு வை அவளை மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சிடணும். அவ ஒரு யூ டியூப் சேனல் வச்சிருக்கா. நீ அதை ஓபன் பண்ணி பாரு. கொஞ்ச நாளா அவ முழு நேர வேலை என்ன தெரியுமா? என்னை கழுவி கழுவி ஊத்துறதுதான். போன முறை அவ போட்ட வீடியோவில் என்னை வேற ஊருக்கு மாற்றல் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க. எத்தனை முறைதான் ஒவ்வொரு ஊருக்கும் மாற்றல் வாங்கிட்டே இருப்பது. மாற்றலை நிறுத்த படாத பாடு பட்டுவிட்டேன். எனக்கு வேண்டாத எவனோ இந்த சூனிய பொம்மையை ரெடி பண்ணி கையில் ஒரு கேமிராவை கொடுத்து விட்டிருக்கான். இப்போ கூட அவ என்ன பண்ணிட்டு இருப்பன்னு நினைக்கிற? நேற்று ராத்திரி எதையாவது எடுத்து வச்சிட்டு அதை எடிட் பண்ணிட்டு இருப்பா." என்றான் விஜயேந்திரன்
"அதுபோகட்டும் அத்தான். அது என்ன கருவாயான்னு ஒரு பேரு. நீ ஒன்னும் அவ்வளவு கருப்பு இல்லையே!" என்றாள் உதிரா சிரித்துக்கொண்டு.
"அவ கிடக்கா வெள்ளை பன்னி. அவ பேச்சை எடுத்து என்னை கடுப்பு ஏத்தாதே! நேற்று அந்த வாலறுந்த குரங்கு என்னவெல்லாம் பண்ணிச்சின்னு நினைச்சி பாரு. சை அந்த சைத்தான் முகத்தை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிட்டு இருக்கேன். அதை கெடுக்க அது தலைகீழ் நின்னதை பார்த்தல. பக்கி அது" என்று பல்லை கடித்துக்கொண்டு போன விஜயேந்திரனை சற்று கவலையுடனே பார்த்தாள் உதிரா.
உதிராவுக்கு இனி வசந்தம் வாழ்வில் வீச போவதே இல்லை என்று உறுதியாக தெரிந்தது. தன் வாழ்க்கை தனியாகத்தான் என்று முடிவு எடுத்து வைத்திருக்கும் இவளிடம் விஜயேந்திரன் என்ன தேடி என்ன?
விஜயேந்திரனைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்த உதிராவின் நினைவில் அந்த துடுதுடு பெண் நினைவு வந்தாள். நேற்று இவள் அத்தானை அல்லோல்ல படுத்திவிட்டாள் அந்த பெண்.