அத்தியாயம் - 5

706 43 1
                                    

"எனக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும்.  உங்க மகன் மனசில் என்னத்தான் நினைச்சிட்டு இருக்கான்? வயசு முப்பது ஆயாச்சு.  இன்னும் ஒரு பிடி கொடுக்காமல் இருக்கிறான்.  சரி கல்யாணத்துக்குத்தான் மறுப்பு சொல்லிட்டு இருக்கான்னு பார்த்தா இப்போ அவனுக்கு குடும்பத்தை பார்க்கவும் பிடிக்காமல் போயிடிச்சு.  அவன் இங்கே வந்து மூணு வருஷம் முடிஞ்சாச்சு.  அவன் வராமல் நம்மை அங்கே வர சொல்லி அப்பப்போ ப்ளைட் டிக்கெட் மட்டும் அனுப்பி வைக்கிறான். இப்படியே எத்தனை வருசத்துக்கு வராமல் இருப்பேனாம்?" என்றார் அம்பிகா ஆற்றாமையுடன்.  

"நீ அவனிடம் கல்யாண பேச்சு எடுக்காத வரை" என்றார் ரவிச்சந்திரன்.  

"என்ன? அதுக்காகவா அவன் இப்படி பண்ணுறான்?" என்று அம்பிகா அதிர்ச்சியோடு கேட்டார்.  அவருக்கே இந்த சந்தேகம் சில மாதங்களாக இருக்கத்தான் செய்கிறது.  ஆனால் அதை தன் கணவர் கூறவும்  அதிர்ச்சியாக இருந்தது.  

"அப்படித்தான் இருக்கும்.  இல்லாட்டி அவன் ஏன் இப்படி ஊருக்கே வராமல் இருக்க போகிறான். ஒரு நாளைக்கு நான்கு முறை போன் போடுறான்.  குன்னூரில் இருக்கும் போது அவன் அப்படி இல்லை.  நினைச்ச நேரம்  ஓடி வந்திடுவான்.  அதனால போன் அதிகமாக போடமாட்டான். ஆனால் இப்போ அவன் போடுற போனை பார்த்தால் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கு என்று சொல்வது போல உள்ளது. போன் போட்டு அவன் மனசை சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கிறான்." என்றான் ரவிச்சந்திரன்.  

"அவன் அப்படி ஏதாச்சும் உங்களிடம் சொன்னானா?" என்று அம்பிகா கேட்க 

"அவன் சொல்லனுமா என்ன? நானும் அவன் வயசை கடந்துதான் வந்திருக்கேன்.  அவன் மனசில் என்னமோ இருக்கு!" என்று ரவிசந்திரன் யோசனையோடு கூறினார். 

"வேற என்ன இருக்கும்? எவளையாவது நினைச்சிட்டு இருப்பான்." என்றார் அம்பிகா.  

"அது என்ன அப்படி பேசுற? உன் மகனுக்கு அந்த உரிமை இல்லையா என்ன? அப்படி அவனுக்கு ஏதாச்சும் எண்ணம் இருந்தா அவன் நேரடியா நம்மட்ட சொல்லிடுவான்.  இப்படி மனசில் வச்சிக்கிட்டு ஒளிஞ்சு ஓட மாட்டான்.  என் மகனைப்பற்றி எனக்கு தெரியும்." என்று ரவிசந்திரன் தன் மகனுக்கு சப்போர்ட்டாக வர அம்பிகா முகம் மாறிவிட்டது.  ஏனென்றால் தன்னால் தான் மகனுக்கு இந்த நிலை என்று அவர் நினைத்து வருந்தாத நாள் இல்லை.  

இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2Wo Geschichten leben. Entdecke jetzt