"உண்மையாகவா கருவாயா சொல்ற? நமக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக போகுதா? ஐய்யய்யோ நான் இப்போ என்ன செய்வேன்? எனக்கு கையும் ஓடல...காலும் ஓடல. ஒரு பக்கம் சந்தோசமா இருக்கு, இன்னொரு பக்கம் கவலையா இருக்கு, இன்னொரு பக்கம் பயமா வேற இருக்கு. நான் என்ன செய்வேன்????" என்று குதிக்கும் ஏஜேவை பார்த்துக்கொண்டே இருந்தான் விஜயேந்திரன்.
அவன் மனதிற்குள் 'நீ சொல்லிட்ட நான் சொல்லல. உனக்கு மூன்று விதமான உணர்வு இருக்கு. எனக்கு இரண்டு விதமான உணர்வுதான். உன்னை போய் கல்யாணம் பண்ணுற ஒரு நிலைக்கு ஆளாகிட்டேனேன்னு கவலையா இருக்கு. உன்னையா கல்யாணம் பண்ணனுமுன்னு பயமாவும் இருக்கு. ஆம்பிளையா இருந்துட்டு பயத்தை வெளியே காட்டலாமா? அதான் பேசாமல் கம்முன்னு இருக்கேன்' என்று நினைத்தான்.
"கருவாயா எனக்கு ஹெல்ப் பண்ணேன். இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்கலாமா கூடாதா? ஏன்னா நீ சரியான ஒரு கிழம். இந்த டிரஸ் போடாதே!, அதை தின்னாதே! இங்கே போகாதேன்னு ஒரே டார்ச்சர் பண்ணிட்டு இருப்ப. இப்பவே நீ இப்படித்தான். அப்புறம் நீ எப்படி எப்படி இருப்பியோன்னு இருக்கு. உன்னை பாக்கும் போது என் சந்தோசத்தை எல்லாம் குழிதோண்டி புதைக்க வந்த எமதர்மன் மாதிரியே தெரியுற. அதான் இந்த கவலையும், பயமும்." என்றாள் அவள் அதே துள்ளலுடன். அதற்கும் இவன் வாயை திறக்காமல் பார்வையை மட்டும் வீசிக்கொண்டு இருக்க
"வாயை திறயேன் பக்கி. சென்னை சிட்டிக்குள்ள பேச இடமே இல்லன்னு எப்போ பார்த்தாலும் மலை, காடுன்னு கூட்டிட்டு வந்திடுற. இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணுற நேரத்தில் நான் என்னன்னவோ பண்ணிடுவேன். ஒரு எடிட்டிங் வொர்க் வேற இருக்கு. இப்பவே வீடியோவை காணலன்னு கமன்ட்ஸ்ல கிழிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இனி கல்யாண ஷாப்பிங், பங்க்ஷன் எல்லாம் முடியுறதுக்குள்ளே என் சேனல் என்ன ஆக போகுதோ!" என்றாள் அவள் கவலையில்.
"ஜோ" என்று அழைத்தான் விஜயந்திரன். எப்போதும் அவன் இப்படி அழைப்பதுதான். ஆனால் இன்று அந்த அழைப்பில் சிறிது தேடல் இருப்பதாக தோன்றியது இவளுக்கு.