ஸ்டோன் கோல்டு செல்வா

896 118 114
                                    

சுட்டெரிக்கும் சூரியன் நிசாவின் தலையை குறி வைத்து அடிப்பது போல இருந்தது. எந்நேரமும் பீச் பலூனாக தலை வெடித்து விடுமோ என பயந்தாள். 'ஸ்டோன் கோல்டு செல்வா' மித்ரன் தம்பி பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தாள். பேரே பயங்கரமாக தெரிந்தது. தனியாக சென்று தேடுவோம் என நூர் சொன்ன போது மறுக்காத தன் மடத்தனத்தை எண்ணி வருந்தினாள். குப்பமெங்கும் மீன் வாடை குப்பென அடித்தது, மீன் குழம்பு வாடையாக இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். குப்பத்துக் காரர்கள் வேறு ஏதோ காணாத்தை கண்டதை போல இவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் அதிலும் ஒரு பொறுக்கி இவளை பின் தொடர்ந்தவாறே இருந்தான். ஒரு வழியாக அவனிடம் இருந்து தப்பிய நேரம் தான், நூர் கால் செய்து இவளை அவசரமாக வர சொல்லியருந்தாள். அங்கு தான் சென்று கொண்டிருந்தாள், தொலைவில் நூர் இன்ஸ்பெக்டர் கணேசுடன் பேசிக் கொண்டிருக்க, அந்த உரையாடலின் பதற்றத்தை இங்கிருந்தே இவளால் உணர முடிந்தது. இவள் அருகில் வந்ததை கண்டதும் பேச்சை சட்டென நிறுத்தி விட்டு இவளை நோக்கினர்

"என்ன மேடம் வர சொல்லிட்டீங்க அந்த ஸ்டோன்கோல்டு கிடைச்சுட்டானா..?" நிசா மேல் மூச்சும் கீழ் மூச்சும் வாங்கிக் கொண்டிருந்தாள்.

"இல்லை" நூர் இவள் கண்களை பார்ப்பதை தவிர்த்தாள். கணேசின் முகம் கவலையில் தோய்ந்து போயிருந்தது. சிறிது நேரம் மவுனித்து விட்டு தொடர்ந்தாள், "நிசா.. ஒரு ப்ராப்ளம்.. காயத்ரி இறந்து போனது மித்ரன் தான்னு கன்பார்ம் பண்ணிட்டாங்க பட்.." அவள் கண்கள் மீண்டும் நிலம் நோக்கியது. "காயத்ரி ஜெர்ரிட்ட மாட்டிட்டாங்க.. இப்போ தான் எனக்கு அவன்ட்ட இருந்து கால் வந்தது.." நிசாவின் காது கேட்டதை இதயம் நம்ப மறுத்தது. "மாமி மாட்டிட்டாங்களா..?" அவளை ஏமாற்றி அனுப்பியதற்கான குற்ற உணர்வை முதன் முறை உணர்ந்தாள். கைகள் பதறியது. தலை லேசாக சுற்றியது காயத்ரிக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என மனம் பதை பதைத்தது.
அவள் கலக்கத்தை உணர்ந்தவளாய் நூர், " பயப்படாதீங்க.. அவங்களுக்கு நான் தான் தேவை. நானே வரேன்னு சொல்லிட்டேன்" கணேஸ் ஏதோ சொல்ல முயல , நூர் அவனை பார்வையாலே நிறுத்தினாள். "நான் கிடைச்சதும் நிச்சயமா காயத்ரிய விட்டுருவாங்க.. டோன்ட் ஒர்ரி.."
இதை கேட்டும் நிசாவுக்கு மனம் ஆறவில்லை. காயத்ரிக்கு ஏதேனும் நேர்ந்தால் தன்னால் தாங்க முடியாது என்பதை அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவளுக்கு உணர்த்தியது.
"ஐ எம் வெரி சாரி.. என்னால தான் எல்லா பிரச்சனையும் உங்களுக்கு.." என்ற நூர்ஐ சமாதானப் படுத்த நிசாவுக்கு தோணவில்லை இவளால் தான் எல்லாம் என்றே அவள் மனதின் ஓர் ஓரம் கூறியது. மேரி மட்டுமல இங்கிருந்தால் சமாளித்திருப்பாள், " மேரிய எங்கே.." என்றாள் அவளை காண வேண்டி, மேரியை காண வேண்டும் அவள் ஆறுதல் வார்த்தைகள கேட்க வேண்டும் என நிசா மனம் துடித்தது.
மேரிக்கும் சொல்லியாச்சு வந்தடுவாங்க.." என்று சொன்ன நூரின் கண்களிலும் குரலிலும் முதன் முறையாக பயத்தை உணர்ந்தாள் நிசா.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now