டாமி

895 112 64
                                    

காயத்ரி வரும் வழி நெடுகிலும் ஜெரியின் பிடியில் தான் சந்தித்த இன்னல்களையும், அதனை தான் சாமர்த்தியமாக சமாளித்த வித்தை பற்றியும் புகழ்ந்து பேசியவாறே வந்தாள். அவள் சொன்ன கதையில் டிரைவர் உட்பட வண்டியில் இருந்த அனைவரும் தூங்கி விழாத குறை. ஒரு வழியாக வண்டி வீடு வந்து சேர்ந்தது இருப்பினும் காயத்ரியின் கதை மெகா சீரியலை போல நீண்டு கொண்டு தான் இருந்தது. இவ்வாறாக நான்ஸ்டாப் எப்எம் ஆக பிதற்றிக் கொண்டு இருந்த அவள் வீட்டின் உள் அறையினை அடைந்தும், ஒரு கனம் உறைந்து போனாள். அடுத்த கணம் டாமி என்று கூச்சலிட்டு விட்டு தன நாயை தாவி அணைத்துக் கொண்டாள். தோழிகள் மூவரையும் டாமியுடன் சேர்த்து பார்த்த நூர்க்கு இவ்வாறெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என வியப்பாகத்தான் இருந்தது. அந்த பாச மலர் காட்சி காண ஏதோ இனம் புரியாத சந்தோசத்தை நூரிடம் ஏற்படுத்தியது. அவள் பலதரப்பட்ட மனிதர்களை பார்த்திருக்கிறாள். குடிக்க காசில்லை என தாயின் காதணிக்காக காதை வெட்டிய கனவான்கள். கள்ள காதலுக்கு இடைஞ்சலாய் இருந்த குழந்தையை விஷம் வைத்துக் கொன்ற மாதர் குல மாணிக்கங்கள், ஆனால் இவர்களை போன்ற ஆட்களை அவள் பார்த்திருக்கவில்லை. ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு போட்டி போட்டு அந்த நாயை கொஞ்சி விளையாடிய அவர்களை பார்த்து நூர்க்கு சற்று பொறாமையாக தான் இருந்தது. அவள் தன்னையும் அவர்களில் ஒருவராக கற்பனை செய்து பார்த்தாள் சேலையும் சுடிதாருமாக, நீண்ட கூந்தலும் நெய்ல் பாலிஷுமாக அவளை நினைத்து பார்க்க அவளுக்கே சிரிப்பாக இருந்தது. ஒரு வேளை அவள் தந்தை மற்ற பெண் குழந்தைகளை போல விளையாட செப்பு சாமானும் டெடி பியரும் வாங்கி தந்திருந்தால், அவளும் இப்படி ஆகியிருப்பாளோ, அனால் அவள் தந்தை ஆண் மகனை போல துப்பாக்கியும், காரும் தான் வாங்கி தந்தார். ஆணை போல வாழ வேண்டுமென்று தான் அவளை வளர்த்தார். பெண் வாழ்வும் இனிக்குமென அவருக்கு ஏனோ தெரியவில்லை. மனதுக்குள் பல நினைவலைகள் ஓட அவள் கண்கள் தான் கண்ட காட்சியில் லயித்திருந்த வேளை . காயத்ரியின் கீச்சு குரல் அவள் கவனத்தை ஈர்த்தது.
" என்னடி இது டாமி வயத்துல கட்டு போட்டுண்டிருக்கு.." என்றாள் காயத்ரி.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now