ஜெர்ரி

1.2K 144 157
                                    

தன் இமைகளில் கல்லை கட்டியிருப்பதை போல உணர்ந்தான் மித்ரன். மிகவும் கஷ்டப்பட்டு கண்களை திறந்தான். அவன் கை , கால்கள் அனைத்தும் கட்டப் பட்டிருந்தன. வாயிலும் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. தான் ஏதோ தகரப் பெட்டிக்குள் இருப்பதாக உணர்ந்தான், பின்னர் தான் அந்த தகரப் பெட்டி ஒரு கார் என தெரிந்தது. அதன் சீட் அமைப்புகளை பார்க்கும் போது அது ஒரு டாட்டா சுமோ கார் போல தெரிந்தது. அவனுக்கு எதிரில் இருக்கிறானா.. இல்லையா என்பது தெரியாத நிலையில் , உடலெங்கும் கட்டுடன் பாதி மம்மியாக சாமி சாய்க்கப் பட்டு கிடந்தான்.
அந்த பழைய கார் குண்டும் குழியுமான சென்னை ரோட்டில் திக்கு முக்காடி நகர்வது மித்ரனின் அடிவயிறு குலுங்குவதில் தெரிந்தது. இவன் காரின் பின் கடைசி சீட்டில் இருந்தாலும் அந்த மூன்று பைத்தியங்களும் பேசுவது இவன் காதில் விழத்தான் செய்தது.

"நான் தான் சொன்னேன், சாமி போனை அட்டன்ட் பண்லாம்னு, இப்போ பாத்தேலா எவ்வளவு சிம்பிளா முடிஞ்சிடுத்து" மாமியின் குரல்.

"சிம்பிளா , இந்த ரெண்டு தடியன்களையும் யாருக்கும் தெரியாமல் தூக்கி போடப் பட்ட பாடு மறந்துடுச்சா..?" மேரியாக இருக்க வேண்டும்.

"ஆமாக்கா.. ஏன்.. போலீஸ் ஸ்டேசன்க்கு வர சொல்லாம, வேற எங்கேயோ வர சொல்றாரு அந்த இன்ஸ்பெக்டர்" இது நிசா தான், மனதிற்குள் மூவரின் வாய்ஸையும் கன்பார்ம் பண்ணிக் கொண்டான்.

"அதான் சொன்னாரே ஏதோ சீக்ரெட் மிசன்னு.."

"என்னவோ போங்கடி.. இந்த பீடைகள கலட்டி விட்டா சரி. ஒன்னு நோட் பண்ணியோ..! நான் பெருமாளான்ட வேண்டின்டேன், அதே போல அந்த இன்ஸ்பெக்டர் பேரும் நாராயணன்.." யாரும் அவளை கண்டு கொள்ளாத போதும் இவர்களை காப்பாற்றி விட்டதாக மனதிற்குள் பெருமிதம் கொண்டாள் காயத்ரி.

இதையெல்லாம் மித்ரன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை ஆனால் காயத்ரி கடைசியாக சொன்ன அந்த பெயர் இனஸ்பெக்டர் நாராயணன். 'செத்தேன்டா..' மனதிற்குள் நினைத்துக் கொண்டான். யாரிடமிருந்து ஓடிக் கொண்டிருக்கிறானோ அவர்களிடமே விதி அவனை கொண்டு சேர்த்திருக்கிறது. மித்ரன் புத்தி மின்னல் வேகத்தில் தப்பிக்க இருக்கும் ஒவ்வோர் வழியையும் ஆராயத் தொடங்கிற்று. பின் டோர் லாக் ஆகி இருக்கிறது அதனை சத்தம் வராமல் உடைப்பது சாத்தியமில்லை. தன்னை கட்டியிருக்கும் கயிரை தொட்டுப் பார்த்தான், இது அவன் வாங்கிய கயிறு தான். குறைந்த பட்சம் கத்தியாவது வேண்டும் இதனை அறுக்க , ஆனால் இவன் கண்ணுக்கு தென்பட்டதோ ஒரு ஊக்கு தான். தன் கதை இன்றோடு முடியப் போகிறதோ என்ற பயம் அவனை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது. தான் விழுந்து தான் ஆக வேண்டுமெனில் சுனாமியாக விழுந்து அனைவரையும் சுருட்டிக் கொண்டு போய் விட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தன் கண் முன் இருந்த ஊக்கை பார்த்தான் . தன் எண்ணம் நிறைவேற இந்த ஊக்கே போதுமானது. மெல்ல நகர்ந்து லாவகமாக அந்த ஊக்கை எடுத்து தன் பின்னால் இருந்த சீட்டில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான்.
ஒரு வழியாக அவன் திட்டத்திற்கு பிள்ளையார் சுழியைப் போட்டு விட்டு திரும்பிய வேளை, சாமி மயக்கம் தெளிந்தவனாய் இவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மித்ரன் சுதாரிப்பதற்குள் "ம்மாமா... ம்மாமா.."  என ஏதோ எருமை மாடு போல கத்தத் தொடங்கினான். அவன் சத்தத்தை கேட்டு காயத்ரி பின்னால் திரும்பி பார்த்து அபாய சங்கு ஊதினாள்.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now