பலி கெடா

807 107 67
                                    

அன்று காலை முதலாகவே நூர் பரபரப்புடன் காணப்பட்டாள் . தான் செய்த ஏற்பாடுகள் அனைத்தும் சரியானதா என மனதிற்குள் நூறாவது முறையாக சோதித்து பாத்தாள். அவளது அனைத்து சோதனையின் முடிவுகளும் அவளுக்கு சாதகமாகவே அமைந்தன. இம்முறை நிச்சயம் வெற்றி உறுதி என எண்ணி கொண்டாள். இருந்தும் அவள் மனதில் சிறு பயம் எல்லாம் சரியாய் நடக்க வேண்டுமே என்று  , பரீட்சையின் அனைத்து கேள்விக்கும் விடை தெரியும் என்கையில்  , முதல் கேள்வி எழுதும் போது லேசாக கைகள் பதறுமே அந்த மாதிரியான பயம் .
டாமியை தூண்டில் புழுவாக, நொச்சி குப்பத்தில் விட்டாயிற்று. இவள் அங்கிருந்து சற்று தொலைவில் காருக்குள் தோழிகளுடன் அமர்ந்திருந்தாள். டாமியின் மீது பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் இவள் லேப்டாப் இன் கவனிப்பில் இருக்க, இவள் கவனமோ தோழிகளின் மீது இல்லாமல் இல்லை. அவர்களை இவ்வளவு சோர்வாக இவள் கண்டதே இல்லை. டாமிக்கு ஏதேனும் நிகழ்ந்தால் , அவர்களுக்கு என்ன சொல்வதென்பதை இவள் இன்னும் யோசித்திருக்கவில்லை. தன்  வெற்றியின் வேட்கையே இவள் மனதை ஆக்கிரமித்திருந்தாலும், துரோகம் செய்கிறோமோ என்ற உணர்வும் ஊசியாய் அவ்வபோது உறுத்தி கொண்டிருந்தது.

*****************

டேய் எழுந்திரி டா .. டேய் என்ற சத்தம், கனவு கன்னியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த செல்வாவின் கனவை கலைக்க, கண் விழித்து பார்த்தான். அவன் முன்னே பெரிய மீசையுடன் நாளைக்கு ரிட்டையர்டு ஆவது போல் ஒரு ஏட்டைய்யா நின்று கொண்டிருந்தார்.

" என்ன சார் பகல்ல தான் நாய தேடி நாயா அலைய விடுறீங்கோ, ராத்திரியாச்சும் தூங்க விடுங்கய்யா.." முட்டை சொறிந்தவாறே சொன்னான்.

" ராத்திரியா.. நாயே மணி பகல் பத்து ஆவுது"

உம்கும்  வாயை வெட்டி, சோம்பலை முறித்தான்.
" சீக்கிரம் கெளம்புடா., ஐயா உன்ன ரிலீஸ் பண்ண சொல்லிட்டாக "

அவன் சொன்ன வார்த்தை இவன் காதில் தேன் மிட்டாயாக இனிக்க, தான் காண்பது கனவா என ஒரு முறை தன தொடையை சொரிந்து பார்த்துக் கொண்டான். அவனிடம் மேலும் கேள்விகள் கேட்டால் , நீ போகவே வேணாம் என உக்கார வைத்து விடுவானோ என்ற பயத்தில், கேள்வி ஏதுமின்றி கிளம்ப தொடங்கினான் , சாரத்திலிருந்து பாண்ட்க்கு ஸுப்ட் ஆனவன், ஏட்டய்யாவுக்கு ஒரு சலாம் வைத்து விட்டு வெளியேற முயல,
" யோவ்.. இதுல ஒரு கையெழுத்தை போட்டுட்டு போ..! " என்றார் அந்த ஏட்டய்யா .
"இது வேறயா .." என வாய் விட்டே சலித்தவன்.
மனப்பாடம் செய்திருந்த தன் கையெழுத்தை அச்சு பிசகாமல் வரைந்து விட்டு, அங்கிருந்து நகன்றான். எதையோ  யோசித்தவனாய் சட்டென நின்றான், பின் திரும்பி
" காற்றை கம்பிகுள்ள கட்டி வைக்க முடியாது ஏட்டய்யா," அவன் சிரிப்பதற்குள், ஏட்டய்யாவின் பதிலோ,
" சும்மா போறியா, இல்ல படுக்க போட்டு வாய்ல மிதிக்கவா..? " என வந்தது, சிரிக்க குவிந்த உதடுகள் அஷ்ட கோணலாய் சுருங்க, நொச்சிக் குப்பத்தை நோக்கி நடையை கட்டினான், செல்லும் வழி நெடுகிலும் , கடந்த இரண்டு நாட்களில் தன் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் அசை போட்டுக் கொண்டே தான் சென்றான். தன் அண்ணன் செத்தது கவலையான விசயமாக இருந்தாலும் தனக்கு அழுகையோ இல்லை அவனை கொன்றவர்கள் மேல் கோபமோ வரவில்லையே,,! ஒரு வேளை அனைவரும் சொல்வது போல தனக்கு சொரணை நரம்பு மட்டும் வேலை செய்யவில்லையோ என நினைத்துக் கொண்டான். தன் அண்ணனுக்கும் தனக்கும் இருந்த பாசப் பிணைப்பை எண்ணிப் பார்த்தான், தனக்கு அழுகை வராததில் அதிசயம் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது. அவன் அண்ணன் எப்போதும் அவனை தம்பியாய் பாவித்ததில்லை, அவனை தம்பி என கூறவே வெட்கி போவான், எப்படியாவது வாழ்நாளில் அவன் அண்ணன் மெச்சும்படி ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்திருந்தான் ஆனால் அதற்குள் அண்ணணின் ஆயுளே முடிந்து விட்டது, இனி  லட்சியத்துக்கு வேலை இல்லை, வேறு ஏதாவது  லட்சியம் யோசிக்க வேண்டும். கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தான் அதற்குள் பசி எடுக்க தன் சைக்கிளை நிறுத்தினான். நொச்சிக் குப்பத்தை நெருங்கி விட்டான், இவ்வளவு தூரம் வந்ததே தெரியவில்லை, அப்பாடா என பெருமூச்சு விட்டு, சிறுநீர் கழிக்க இடம் தேடிய வேளை , சற்று தொலைவில் அவன் கண்ட காட்சி, அவன் களைப்பை எல்லாம் கழை எடுக்க, தான் பிழைக்க வழி வந்ததென்ற எண்ணம் குல்பி ஐசாக அவனை அந்த வெயிலில் குளிர்வித்தது.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Donde viven las historias. Descúbrelo ahora