காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.
அந்த நான்கு பேர் கொண்ட அறையில் ஜீவனின் கைபேசி அதிர்ந்து அழைப்பை உறுதி செய்தது. மெத்தையில் இருந்து எழுந்தவன் மேசையில் இருந்த தன் கைபேசியை எடுத்து அழைத்தது யார் என பார்த்துவிட்டு முகம் சுளித்தான். தொடர்ந்து அழைப்பு ஒலித்துக்கொண்டே இருக்க அவனருகே வந்த வெங்கட், "ஜீவா attend பண்ணி என்னனு கேளுடா?" என்றான்.
வேறுவழியின்றி சலிப்போடு அழைப்பை ஏற்றவன் காதில் அவன் அன்னை குரல் ஒலித்தது.
"எப்படிடா இருக்க? அம்மாவ பார்க்க வரமாட்டியா? அடுத்த வாரம் டூர் போறீயாமே? பார்த்து போயிட்டு வா பா" என்று அவர் கூற அவன் பதிலேதும் கூறவில்லை.
ஆனால் அது அவரை பெரிதும் பாதிக்கவில்லை போலும் தொடர்ந்து பேசினார். அவன் அவரது அழைப்பை ஏற்றதே பெரிய மகிழ்ச்சியைத் தந்தது.
குரல் கரகரக்க அவர், "என்ன மன்னிச்சிடு கண்ணா" என்று கூறியதும் அழைப்பை துண்டித்து விட்டான்.
அந்த அறையில் உள்ள மூவரும் அவனை கேள்விகளோடு பார்த்தனர். ஆனால் பதிலேதும் கூறாமல் துணிமணிகளை எடுத்து வைத்தான். இப்போது மட்டுமல்ல கல்லூரியில் அவர்கள் நால்வரும் நண்பர்களான பின்னரும் கூட அவன் ஏன் தன் அன்னையிடம் பேசுவதில்லை என்று புரிந்ததேயில்லை. உதவியென்றால் உடனே ஓடிவரும் நண்பன் ஏன் பெண்களை வெறுக்கிறான் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தானாகவே பல பெண்கள் நட்பாக பேச முயன்றும் அவன் முகத்தை திருப்பி சென்றுவிடுவான்.
இதனால் மற்ற மூவரும் எந்த பெண்ணோடும் அவன் அருகே இருந்தால் பேசுவதை தவிர்த்திடுவர். என்னதான் அவன் அப்படி இருந்தாலும் அவர்களை தன் போல இருக்குமாறு அவன் வற்புறுத்தியது அல்ல. அவர்கள் அப்படி பேசும் போது விலகி சென்றிடுவான்.
இங்கே இப்படி இருக்க மறுபுறம் ஜனனி தன் வீட்டையே அல்லோலப் படுத்திக் கொண்டிருந்தாள். அவளது தொந்தரவு தாங்க முடியாமல் அவளுடைய தந்தையும் பாட்டியும் கோவிலுக்கு செல்வதாக கூறி தப்பித்துக் கொண்டாள். உடைகளால் நிரம்பி வழிந்த தன் அலமாரியை பார்த்தவள், "எனக்கு dress ஏ இல்ல. அம்மா இங்க வாயேன்" என்று அவரை அழைத்தாள்.
சோர்வாக நடந்து வந்தவர், "என்ன தான் உன் பிரச்சனை இப்ப? ஸ்நாக்ஸ் வேணும்னு ஒரு லிஸ்டே போட்டுக் கொடுத்த. அதை வாங்கிட்டு வந்து உன் bag ல எடுத்து வைக்கிறதுக்குள்ள என் energy ஏ போய்டுச்சு. ஒரு வாரம் டிரிப்கு எதுக்கு இவ்வளோ ஸ்நாக்ஸ்" என்றார் களைப்பாக.
அசடு வழிய சிரித்தவள், "என்னமா நீயே இப்படி சொல்லலாமா? அதெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து. மொத இந்த பிரச்சினைய தீர்த்து வை. எனக்கு shopping இப்பவே போகனும். வா மா" என்றாள்.
அதே நேரம் அவளது நண்பர்களான ஷிவா, வைஷ்ணவி, ப்ரிட்டோ, மோனிஷா, அஞ்சலி வீட்டிற்குள் ஆர்பாட்டமாக நுழைந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் நிம்மதி பெருமூச்சுடன் எழுந்தவர், "நல்லவேளை நீங்கள்லாம் வந்துட்டீங்க. இனி நீங்களாசசும் அவளாச்சும்" என்று அந்த இடத்தை விட்டு சென்றார்.
இதுதான் சமயம் என்று அவர் சென்றதும் அவர்களை வலுக்கட்டாயமாக கடைகளுக்கு அழைத்துச் சென்று துணிகளை வாங்கினாள் ஜனனி. ஒவ்வொரு கடைக்கும் ஏறி இறங்கி அவர்கள் கால்களில் வலி பின்னியது. ஆனாலும் அரட்டைகளோடு மகிழ்ச்சியாக சென்றது அந்த நாள்.