சிவாவுடன் சென்ற ஜனனி இருவருக்கும் சேர்த்து இரண்டு ஓரியோ மில்க்ஷேக் ஆர்டர் செய்து எதிர் எதிரேயுள்ள நாற்காலிகள் ஒன்றில் அமர்ந்தாள். அவளுக்கு எதிரே உள்ள நாற்காலியின் சிவா அமர்ந்தான். அவளிடம் என்னவெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தானோ அதை மனதில் ஒருமுறை சரிபார்த்து கொண்டான்.
இப்போதும் ஆர்த்தி கூறியதை நம்ப முடியாமல் அவனைப் பார்த்தவள், "நீ ரொம்ப மாறிட்ட சிவா. ஞாபகம் இருக்கா என்கூட சண்டை போட்டுட்டு நான் லூசு தனமா எதாச்சும் பண்ணா அட்வைஸ் பண்ணிட்டு இருந்த சிவா இப்போ இல்ல. அப்போல்லாம் என்கிட்ட நீ எதையும் மறைச்சதில்ல. நான் சைட் அடிச்சப்போ என்கூட சேர்ந்து கிண்டல் பண்ணுவ. அப்போ இருந்த நம்ம ஃபரண்ட்ஷிப விட்டு ரொம்ப தூரமா போயிட்ட மாறி தெரியுற" என்றாள் தன் மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி.
அவள் கூறியதைக் கேட்டதும் தான் பேச நினைத்ததவைகளை மறந்து, "நீ மட்டும்? முன்னாடி எத்தனை பேர் இருந்தாலும் நீ எனக்கு தான் முக்கியத்துவம் தருவ. ஆனா, இப்ப நான் இருக்கேனா இல்லையானு கூட நீ கவனிக்கவில்ல. ஏன்னா உன்கூட இப்ப ஜீவா இருக்கான்ல" என்று ஜீவா மீதான வெறுப்புடன் கூறினான்.
"லூசு மாதிரி பேசாதடா. ஜீவா...ஜீவா எனக்கு வேற. நீ எனக்கு வேற. என்கூடவே வளர்ந்தவன்டா நீ. ஃபரண்டு டா நீ எனக்கு. உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம நான் எதையாவது பண்ணிருக்கேனா?" என்று கேட்டாள்.
அதற்கு நக்கலாக சிரித்தவன், "ஜீவா கூட பேசுறது பத்தி என்கிட்ட எப்போ கேட்ட? எனக்கு ஞாபகம் இல்லையே" என்றான்.
அதில் அவளுக்கு கோபம் உண்டாக, "என்னடா பேசுற நீ? ஃபீலிங்க்ஸ் நம்ம முடிவு பண்ணி வர்றது இல்ல. It just happens. அது ஏன் உனக்கு புரியல. நீ என்ன அப்படி...நினைக்கிறேனு என்னால இப்பகூட ஏத்துக்க முடியல. நீ என் பெஸ்ட் ஃபரண்டுடா மென்டல். அதோட வேல்யூ புரியாம இப்படி சங்கடமா ஃபீல் பண்ண வைக்காத. ப்ளிஸ்" என்று கெஞ்சும் தொனியில் முடித்தாள்.
அதைக் கேட்டவன் உள்ளத்தில் தோன்றிய வலியோடு, "அப்போ ஏன் என்ன மட்டும் புரிஞ்சுக்க மாட்டேங்குற? என்னக் கேட்டா என் மனசு உன்ன லவ் பண்ணுச்சு? என் அம்மா என்னைவிட்டு போனப்போ நீ ஏன் நான் உனக்காக இருக்கேன்லனு சொன்ன? ப்ராமிஸா சொல்றேன் அப்பகூட இது லவ்னு எனக்கு தோணல. நீயும் ஜீவாவும் க்ளோஸ் ஆனப்போ தான் நீ என் மனசுல எப்படி இருக்கேன்னு எனக்கு புரிஞ்சுது. என்னால முடியல ஜனனி" என்று முடிக்கும் போது அவன் விழியில் நீர் நிறைந்தது.
அதைக் காண முடியாமல் மேசையில் இருந்த டிஷு பேப்பரை அவனிடம் நீட்டியவள், "இப்பவும் நான் உனக்காக இருக்கேன் மென்டல். ஆனா, நல்ல ஃபரண்டா. உன்ன எரிச்சலேத்ற ஜனனியா இருக்கேன். என் மனசு என்கிட்ட இல்ல சிவா. நான் ஜீவாவ விரும்புறேன். அவன தவிர வேற யார் மேலயும் எனக்கு அந்த உணர்வு வராது. நான் உன்ன ரொம்ப ஹெர்ட் பண்ணிட்டேனு எனக்கு புரியுது. ஆனா, அதுக்கு என்னால என்ன செய்ய முடியும் சொல்லு?" என்று கேட்டாள்.
அவள் இதழ் மூலம் தான் அறிந்த பதிலை மீண்டும் கேட்ட போது மனம் மேலும் காயப்பட்டது சிவாவிற்கு. வெறுமையான புன்னகையுடன், "தெரியும். ஆனாலும், எனக்கு உன்கிட்ட இது சொல்லிடனும்னு இருந்தது. சாரி லூசு. எனக்கு இதெல்லாம் அக்ஸெப்ட் பண்ணிக்க கொஞ்சம் டைம் வேணும்" என்றான் வேறுபுறம் திரும்பி.
அதைக்கேட்டு மெல்ல தலையாட்டியவள் கண்ணீருடன், "உன்ன ஒரு அறையாச்சும் அடிக்கனும்னு வந்தேன். ஆனா இப்போ..ம்ம் ஃபரண்ட்ஸ் தானே?" என்று கை நீட்டினாள்.
அதற்கு மறுப்பாக தலையசைத்தவன், "இப்போதைக்கு நோ சான்ஸ். கொஞ்ச நாள், மே பி கொஞ்சம் மாசமாச்சும் உன்னைவிட்டு தூரமா இருக்கனும். அப்பறம்..எல்லாம் சரியாகிவிடும்னு நினைக்கிறேன். பெருசா நான் இதுவரை லீவ்ஸ் எடுக்கல. அத இனி யூஸ் பண்ணிக்கிறேன்" என்றான்.
அவனிடம் அதற்கு மேலும் பேச முடியாமல் விழிநீரோடு தலையை மேலும் கீழும் அசைத்தவள் அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்ததும் தான் நடந்த போட்டிக்கான முடிவை அறியாமல் வந்தது நினைவுக்கு வந்தது. ஜீவாவிற்கு இப்போது அழைத்தால் தன் குரலில் உள்ள மாற்றத்தை அறிந்து கொண்டு கேள்விகளை எழுப்புவான். அதற்கு அனைத்தையும் விளக்கிக் கூறினால் தான் சரிபடும் என்பதால் அதை நாளை பார்த்து கொள்ளலாம் என்று ஆர்த்திக்கு அழைத்தாள்.
______________________________________
வணக்கம் மக்களே,
இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க❤️
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.