25. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்?

281 15 0
                                    

அன்றைய நாளின் முடிவில் சிவாவும் ஜீவாவும் தேர்வாகியிருந்தனர். ஆனால் அதை கொண்டாடும் நிலையில் இருவருமே இல்லை. வீட்டிற்கு வந்த பின்னரும் கூட ஜனனியின் மனது ஜீவாவை சுற்றியே இருந்தது. நீண்ட யோசனைக்கு பின்னர் அவனது எண்ணிற்கு அழைத்தாள். அந்த சமயம் அவன் திரையரங்கில் வேலை பார்த்து கொண்டிருந்ததால் சத்தம் கேட்காதவாறு வைத்திருந்தான். இருமுறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படாமல் இருக்க அவனை மனதில் திட்டிய படியே உறங்கினாள் ஜனனி.

பன்னிரண்டு மணிக்கு பணியை முடித்து வீடு வந்தவன் கைப்பேசியைப் பார்க்க அதில் இரண்டு அழைப்பு வந்திருப்பதை கண்டு அந்த எண்ணிற்கு அழைத்தான். தூங்கும் போது அழைப்பேசியை மறந்து மெத்தையில் தன்னருகே வைத்ததால் இப்போது அது ஒலித்ததும் எரிச்சலோடு பாதி கண்களை திறந்தவாறு அழைப்பை ஏற்றாள் ஜனனி.

"ஹலோ.." என்று குளறியவளின் குரலைக் கேட்டதும் ஜீவா கண்டுகொண்டான்.

"ஹலோ. என்ன தூங்கிட்ருக்கியா?" என்று புன்முறுவலுடன் கேட்டான்.

"ம்ம்..இல்ல டி20 மேட்ச் ஆடிட்ருக்கேன். யோவ். நீ கால் பண்ணி விளையாட நான் கிடச்சேனா?" என்று தூக்கம் கலையாமல் திட்டினாள்.

அதில் மேலும் சிரித்தவன், "அடிப்பாவி. நீயே கால் பண்ணுவ. பதிலுக்கு என்னனு கேட்டா விளையாடுறேனா நான். ரைட்டு.. மேடம் நான் ஜீவா. உங்க லவ்வர்" என்றான்.

அவன் பெயரைக் கேட்டதும் தூக்கம் முழுவதும் விலக அவன் பேசியதை உணர்ந்தவள், "லவ்வரா? டேய் நீ எப்போ எனக்கு லவ் யூ சொன்ன. சண்டைதான் போடுற" என்று கேட்கும்போதே அவள் கன்னங்கள் சிவந்தது.

"ஓஹோ‌! சொன்னா தான் லவ்வா? என்னையே குறுகுறுனு பார்த்துட்டு ஒரு சிரிப்பு சிரிப்பியே. அதுலயே உன் லவ் எனக்கு தெரியும். இன்னைக்கு நான் பாடுனேனே அந்த பாட்ல என் லவ் உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். ஆனா நீ தான் மக்கு பாப்பா ஆச்சே" என்றான் கேலி செய்து.

அவனுள்ளும் சிறு கூச்சம் பிறந்தது. தன்னவளிடம் காதலைப் பற்றி பேசும்போது எந்த ஒரு ஆண்மகனும் சற்று நாணத்தானே
செய்வான்.

"என்னடா இன்னைக்கு அநியாயத்துக்கு பேசுற. சரி அடுத்த ரவுண்டுக்கு ப்ரினேஷன் ஸ்டார்ட் பண்ணிட்டியா? அடுத்த ரவுண்ட்ல நம்ம சிட்டில இருக்க நிறைய காலேஜ்லருந்தே வருவாங்க. காம்பிடீஷன் ஹெவியா இருக்கும். அதனால அதுலுயே கவனமா இரு" என்று அவன்மீது அக்கறையுடன் பேசினாள்.

"அதுதான் என்ன பண்ணப்போறேனு தெரில. முடிஞ்சளவு ட்ரை பண்றேன். மத்தபடி அன்னக்கு என்ன நடக்கும்னு ஐடியா இல்ல" என்றவன் பேசும் போதே ஜனனியின் கொட்டாவி சத்தம் கேட்க மெல்லிய குரலில் சிரித்தான்.

"நீ போய் தூங்கு. இல்லாட்டி நாளைக்கு க்ளாஸ்ல தூங்கி விழுவ" என்றான் தானும் தூங்குவதற்கு தயாராகி.

"ம்ம்" என்றவள் அழைப்பை துண்டித்ததும் தூங்கிவிட்டாள்.

தொடர்ந்து வந்த வாரங்களில் சரியான தூக்கம் இன்றி ஒரு பக்கம் வேலை மறுபக்கம் பாடுவதற்கான பயிற்சி மறுபுறம் கல்லூரி என்று ஜீவா உடல் அயர்வோடு காணப்பட்டான். வகுப்புகள் நடக்கும் போது அதிகமுறை தூங்கி விழுந்தான். முதல் வாரம் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜனனி அவன் கண்களின் கீழ் படிந்த கருவளையம் கண்டு கவலையுடன் கேட்டாள்.

"என்னடா பண்ற வீட்ல? முகத்த பார்த்தா சரியா தூங்காத மாதிரி இருக்கு. ரொம்ப ப்ராக்டிஸ் பண்றேன்னு உடம்பு கெடுத்துக்காத" என்றாள்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லை. வீட்ல இப்பல்லாம்..ஹான் அதிக கொசு தொல்ல. அதான் சரியா தூங்க முடியல" என்று சமாளித்தான்.

"என்னவோ சொல்ற" என்று கூறினாலும் அவள் மனதில் அவனது உடல்நிலை குறித்த கவலை அதிகரித்தது.

சிவா ஜனனியிடம் அதிகமுறை பேச முயற்சித்தும் அதற்கான சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவன் மனம் உடைந்தான். இன்று சிவாவின் பிறந்த நாள் என்பதால் அதன்மூலம் அவளுடன் வெளியே செல்லுவதற்காக அவளை அழைத்தான். ஜனனியும் அனைவரும் சேர்ந்து செல்லப் போகிறோம் என்று நினைத்து சரி என்றாள்.
________________________________________
வணக்கம் மக்களே,

இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க..

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Where stories live. Discover now