அவள் முகத்தை கேள்வியோடு பார்த்து கொண்டிருந்த தந்தையிடம் திரும்பிய ஜனனி, "ப்பா நான் உள்ள போறேன். நீங்க எதாவது வாங்கனும்னா வாங்கிட்டு வாங்க" என்று கூறிவிட்டு உள்ளே விரைந்து சென்றாள்.
யோசனையுடன் பாப்கார்ன் கவுண்டர் வந்த அவள் தந்தை வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு, "ஜனனிய உனக்கு தெரியுமா தம்பி?" என்று கேட்டார்.
அவர் திடீர் கேள்வியில் அதிர்ந்தவன் பின் முயன்று புன்னகைத்து, "ஆமா அங்கிள். நான் ஜனனி ஃபரண்ட். அது என்னன்னா..நான் இங்க வேல பார்க்கிறது அவளுக்கு தெரியாது. அதான் கொஞ்சம் அப்செட் ஆகிட்டா" என்று விளக்கம் தந்தான்.
அவர் தன்னை தவறாக எண்ணிவிட கூடாதே என்ற பரிதவிப்பு அவனிடம் இருந்தது. ஆனால், அவன் கூறியதைக் கேட்ட ஜனனியின் தந்தைக்கு அவன் பொறுப்புணர்வைக் கண்டு பெருமிதமாக இருந்தது.
"ஓ..அதான் ரீசனா? படிக்கும் போதே பார்ட் டைமா வொர்க் பண்றது ரொம்ப நல்ல விஷயம். நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத. நான் ஜனனி கிட்ட பேசுறேன்" என்றார் புன்னகையுடன்.
தன்னை வித்தியாசமாக நடத்துவார் என்று எண்ணிய ஜீவா அவரது இலகுவான பேச்சில் தயக்கங்கள் மறைய தானும் முறுவலித்து, "தேங்க்ஸ் அங்கிள்" என்றான்.
"அதெல்லாம் எதுக்கு? எனக்கு ரெண்டு பாப்கார்ன் மட்டும் குடுத்திடு. அதுதான் இப்ப ஜனனிய கன்வின்ஸ் பண்ணும் " என்று மகளை கிண்டல் செய்தார்.
இரண்டு பாப்கார்ன் கொடுத்து அதற்கான பணத்தை தானே தருவதாக ஜீவா கூற மறுத்த ஜனனியின் தந்தை வேலை வேறு உறவு வேறு என்று பணத்தை அவனிடம் உரிமையுடன் திணித்து விட்டு சென்றார். அவர் செல்வதை பார்த்த ஜீவாவிற்கு தன் தந்தையும் இதுபோல இன்று தன்னுடன் இணக்கமாக இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கம் கொண்டான். பின், வேலையில் கவனம் செலுத்தி அந்த சிந்தினையை மனதிலிருந்து துரத்தினான்.
படம் முடிந்த பின்னரும் ஜனனி எதுவும் பேசாமல் மௌனம் காக்க அவள் அன்னை புரியாமல் தன் கணவனை பார்த்தார். அதை புரிந்து கொண்ட அவர், 'நான் பார்த்து கொள்கிறேன்' என்பது போல சைகை செய்தவர் வீட்டிற்கு வந்ததும் மகளிடம் அதுகுறித்து பேச முயற்சித்தார்.
ஜீவாவை பற்றி ஏதேனும் கேள்வி கேட்பார் என்பதை அறிந்த ஜனனி போலியான தூக்கத்தோடு கண்களைத் தேய்த்து, "எனக்கு செமயா தூக்கம் வருது. குட் நைட் பா" என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
தன் கைபேசியை பார்த்தவள் அதில் இருந்த ஜீவாவின் அழைப்புகளைக் கண்டும் அவன் எண்ணிற்கு அழைக்க விரும்பாமல் கைபேசியை சைலண்ட் மோடிற்கு மாற்றினாள். வெகு நேரம் வரை தூக்கம் வராமல் புரண்டவள் காலை ஆறு மணிக்கு தான் உறக்கம் கொண்டாள். அதனால் கல்லூரிக்கும் செல்லவில்லை. தாமதமாக எழுந்து வந்தவள் காலை நேர வேலைகளை முடித்து விட்டு சிற்றுண்டி உண்ண ஹாலிற்கு வந்தாள்.
அவளை ஆச்சரியப் படுத்தும் வகையில் காலையிலேயே பணிக்கு சென்றிருக்க வேண்டிய தந்தை சோஃபாவில் அமர்ந்திருந்தார். குழப்பத்துடன் அவர் அருகே சென்றவள், "ப்பா?" என்று அழைத்தாள்.
________________________________________
வணக்கம் மக்களே,இந்த அத்தியாயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்துக்கள சொல்லுங்க...
YOU ARE READING
பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
Teen Fictionகாதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.