17

254 19 8
                                    

“செவ்வானமாச்சே செருக்களமும்
ஐயா உன் வாள் வீச...
வயக்காடும் செவக்காடும்
இடுகாடு சுடுகாடாச்சே
ஐயா உன் வேலெடுக்க...
தாயைத் தொலைச்சப்
பிள்ளையாகிக் கதறுதய்யா
உன்னைப் பகைச்ச நாட்டுமக்க...”

“ஏய்.. என்னடி இப்படி குத்தறவ.. யார் மேல அம்புட்டு கோவம் உனக்கு... அவ எம்புட்டு மெதுவா பாடுதா.. நீ இடி இடிக்கறமாதிரி இடிச்சுட்டுக் கிடக்க... நெல்லு வெளிய சிதறுது பாரு... பாட்டுக்கு ஏத்தமாதிரி பதவிசா உலக்கைய உரல்ல இடிக்கணமடி...”
தண்டட்டிகள் அசைய வாய்மடுத்த கிழவியை உறுத்துநோக்கினாள் அவள். அவளது கண்கள் சிவந்திருந்தன.

“தேவி... தேவி...”

உள்ளிருந்து ஒரு பெண்குரல் கேட்க, அவளது விழிகள் தாழ்ந்தன.
பிடித்திருந்த உலக்கையை எதிரே நின்றபெண்ணின் பக்கம் சாய்த்துவிட்டு “அம்மா..”என்றபடி உள்ளே ஓடினாள்.

“ என்னத்துக்கு இப்படி ஓடிவர்ற? பொம்பளைப்பிள்ள நடக்கறது பூமியம் அறியக்கூடாது...”

அவள் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்தாள். அவளது அம்மாவே தொடர்ந்தார்.

“உங்கப்பா வருகிற நாழிகையாகிப் போச்சு... போய் இலையை நறுக்கிட்டு வா...” சேலை முந்தானையை இழுத்து சொருகியபடி கவனமாக தீயில்லாமல் கரிச்சூட்டில் முக்கால்வேக்காடாக வெந்திருந்த சோற்றை வடித்தபடி சொன்னார்.

தலையசைத்துவிட்டுக் கொல்லைப்புறம் ஓடப்போனவள், வாங்கிய திட்டு நினைவுக்கு வரவே அணிந்திருந்த கால்கொலுசொலி; காதுக்குக் கேட்காமல் நடக்கத் தொடங்கினாள். இலையை நறுக்கிக்கொண்டிருக்கும்போதே கூடத்தில் பேச்சுக்குரல்கள் கேட்க தந்தை வந்துவிட்டார் என்பதை அறிந்தாள். தந்தையின் குரலோடு சேர்த்து ஒலித்த குரலில் அவளையறியாமல் கன்னங்கள் சிவக்கத் தொடங்கின. சிறிது நேரம் நின்று அதைச் சமன்செய்தவள், முகத்தில் உணர்வுகளைப் படிக்க யாருக்கும் இடம் கொடுக்காமல் இலையோடு வந்தாள். அங்கே நின்றிருந்தவனின் கண்கள் ஆவலோடு அவள் முகம் பார்ப்பதை உணர்ந்தவள், வேகமாக அந்த இலையைத் தாயிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வெளிப்புறம் செல்லப்போக ஏற்கனவே அங்கே நின்றிருந்த அவளது தாய் அவளைத் தடுத்தார். அவரது சேலை கழுத்தோடு சேர்த்து இழுத்துப் போர்த்தப்பட்டிருந்தது.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now