18

245 22 13
                                    

“ஐயோம்மா...” வாயிலில் ஓலக்குரல் பெரிதாகக் கேட்க, தனது தாயின் அருகில் படுத்திருந்த தேவி,இறுகக் கண்களை மூடினாள். தனது தாயார் பதறடித்து எழுந்து வெளியே செல்வது தெரிந்தும் அவள் அமைதியாகவே சலனமில்லாமல் அதே அப்பாவி முகத்துடன் படுத்திருந்தாள். சில நிமிடங்களில் அவளது தாயின் கதறலும் கேட்டது... இன்னும் சில நிமிடங்கள் இடைவெளி விட்டவள், எழுந்து மெல்ல வெளியே செல்ல, அவளைப் பார்க்கவும் அவளது தாய் ஓடிவந்து அவளைக் கட்டியணைத்துக் கொண்டு அழுதார்.

“ஐயோ.. பச்சை மொட்டு முளைக்கமுன்னமே இப்படி கருகிப் போச்சே...” அவளது கழுத்தில் தொங்கிய தாலியைப் பார்த்துப் பார்த்து அழுதார். கூடவே அந்தக் கிழவியும் இன்னும் சிலபல பெண்களும் சேர்ந்து கொள்ள ஒன்றும் தெரியாமல் அப்பொழுதுதான் கேட்பது போல அதைக் கேட்ட தேவியும் மலங்க மலங்க விழித்தாள்.

“ஐயோ.. அழக்கூடத் தெரியாம எம்பிள்ளை அதிர்ந்து போய் நிக்குதே... இந்தப் பச்சைமண்ணைக் கூட எண்ணாம அந்த மகராசன் போய்ச் சேர்ந்துட்டானே...” எதேச்சையாகக் கீழே குனிந்த தேவி, அப்போதுதான் தன் காலைப் பார்த்தாள். அதில் கொலுசு இல்லாமல் இருக்க, திக்கென்றது. படுக்கையில் விட்டுவிட்டோமோ என்று தோன்றியது. ஆனால் அவளை நகரவிடாமல் நான்கைந்துபேர் அணைத்து அழுது கொண்டிருக்க, அழுவதுபோல அனைவரையும் தள்ளிவிட்டுவிட்டு உள்ளே ஓடியவள், படுக்கையில் பார்த்தாள். இல்லை.. தான் வந்த கொல்லைப்புறத்தில் பார்த்தாள் இல்லை.. வீடு முழுவதும் அங்குமிங்கும் பார்த்தாள். அதைப்பார்த்த அவளது தாய் அவளுக்குப் புத்தி பேதலித்துவிட்டதோ என்று அவளைப்பிடிக்க வர, அவரைத் தள்ளிவிட்டவள், வேகமாக வெளியே ஓடினாள். ஓடியவள் நின்ற இடம் பிறைசூடன் இறந்து கிடந்த இடம்.

மின்னல் வேகத்தில் ஓடிவந்தவள், அங்கே நின்றிருந்த தனது தந்தையையும் காவலர்களையும் காணவும் சற்று அதிர்ந்து அப்படியே நின்றாள். தோளில் போட்டிருந்த துண்டை வாயில் வைத்து அழுதுகொண்டிருந்த அவளது தந்தை தலைவிரிக்கோலமாக வந்துநின்ற மகளைப் பார்த்து இன்னும் அழ ஆரம்பிக்க, சற்று நேரத்தில் பின்னாலேயே மூச்சிரைக்க ஓடிவந்த தாய் இறந்துகிடந்த தனது மருமகனைப் பார்த்து அழ ஆரம்பித்தார். இப்போது கொலுசைத் தேட இயலாது என்பதை உணர்ந்தவள், முகத்தில் உறைந்திருந்த புன்னகையோடு இறந்துகிடந்த பிறைசூடனின் மார்பில் சென்று விழுந்தாள். அவனது முகத்தைப் பார்க்கவும் அவளுக்குத் தானாகவே அழுகை வந்தது. அழுதபடியே சுற்றி இருந்த இடத்தில் கொலுசு எங்கேயும் விழுந்து கிடக்கிறதா என கண்ணாலேயே தேடத் தொடங்கினாள்.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now