மிகச்சரியான பதத்தில் அந்த மூலிகையை அரைத்துக் கொடுத்த மாதிசனை மெச்சுதலாகப் பார்த்த உதிரன் அவனிடமிருந்து வாங்கி அந்த மருந்தை வந்திருந்த குழந்தைக்குப் புகட்டினான்.
மூன்று மாதம் ஆகப்போகிறது மாதிசன் இவர்களோடு ஐக்கியமாகி. உதிரன் முதலில் மாதிசனை நம்பவில்லை. வெயினியுமே. அன்று அவன் விஷத்தையே அருந்தியிருந்ததைக் கண்ணுற்றும் கூட நம்பத்தோன்றவில்லை...
சாக நினைப்பவன் வைத்தியன் வீட்டு வாசலிலேயே படுத்திருப்பானா? என்ன? என்ற கேள்வி உறுத்தியது. ஆனால் அதை அவன் அருந்தியிருந்த விஷம் முறித்துப்போட்டது.அன்று கண்கள் செருகிக்கிடந்தவனை உள்ளே தூக்கி வந்து நாடி பார்த்தபின் முதலில் மயக்கம் தெளிவதற்காக ஒரு மருந்தைப் புகட்டினான். அதை விழுங்கி சற்று தெளிவு பெற்றவன் அடுத்த மருந்தை விழுங்க மறுத்தான்.
“நீங்க என்ன மருந்து கொடுத்தாலும் உங்களால என்னைக் காப்பாத்த முடியாது. வீண்முயற்சி செய்யாதீங்க. என்னை நிம்மதியா சாகவிடுங்க...”
“உன்னைக் காப்பாத்த முடியுமா இல்லையான்னு வைத்தியர் நாங்க முடிவு செய்யணுமே தவிர நீ இல்ல...” என்ற உதிரன் வெயினியோடு அங்கே இருந்த சில பல குப்பிகளைத் திறந்து சில பொடிகளைச் சேகரிக்கத் தொடங்கினான்.
“நானும் வைத்தியன்தான். நான் மட்டுமில்ல... எங்கப்பாவும். அதுலயும் அவர் எங்கநாட்டோட ராஜவைத்தியரா இருந்தவர். ஆனா அவரால கூட... அது என்ன அவரால மட்டும்... இந்த உலகத்துல இருக்க எந்த நாட்டு ராஜவைத்தியரால கூட முறிக்க முடியாத ஆலகாலம் இது. இங்க காட்டோட காடா இருக்க ஊர்ப்புறத்துல அப்பப்ப மருந்து அரைச்சு கொடுக்குற நீங்க கொடுக்கற மருந்துக்கெல்லாம் அடங்காது.” என்றவனை அடுத்த வார்த்தை பேசவிடாமல் வாயைப் பிடித்து அவன் திமிற திமிற மருந்தை உள்ளே ஊற்றியிருந்தான் உதிரன்.
“எதுக்கு விஷம் குடிச்ச?”
“ஓ.. நான் உட்கார்ந்து பேசவும் நீங்க கொடுத்த மருந்து வேலை செய்யுதுங்கற எண்ணத்துல இருக்கீங்களா? இந்த விஷம் மெதுவாதான் வேலை செய்யும். ஆனா குடிச்சபிறகு காப்பாத்த முடியாது. அதுதான் இந்த விஷத்தோட கொடூரமே. என்னை மாதிரி எதுக்கும் துணிஞ்சு குடிக்கறவனுக்குக் கவலை இல்ல. ஆனா அவசரபுத்தியில குடிக்கறவங்களை எப்படியாவது பிழைச்சுர மாட்டோமான்னு ஒவ்வொரு நொடியும் ஏங்க வச்சு சாகடிக்கும். ஆனா குடிச்ச எட்டு நாழிகைக்குப் பிறகு யார் தலைகீழா நின்னாலும் உயிர் போயே தீரும்.”
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)