அடர்ந்து செறிந்திருந்த அந்த கானகத்தில் வித்தியாசமாகத் தெரிந்த ஒவ்வொரு தாவரத்தின் மீதும் கவனத்தைப் பதித்து நடந்துகொண்டிருந்த கணவனிடம் அவ்வபோது கவனத்தை செலுத்தியபடி நடந்துவந்து கொண்டிருந்தாள் அவள்.
பார்த்தாலே சமீபத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பாகத்தான் திருமணமான புதுமணப்பெண் என்று தெரிந்தது.
ஆனால் அவள் புதுமணப்பெண்தானா என்று மூன்று விஷயங்கள் ஐயத்தைக் கிளப்பின.
முதலாவது அவள் தரித்திருந்த ஆயுதங்கள். அவளுடைய கணவன் நிராயுதபாணியாக முன்னால் நடந்துகொண்டிருக்க, அவள் கையில் வேலையும் இடையில் வாளையும் தோளில் வில்லையும் முதுகில் அம்புகளையும் சுமந்து நடந்து கொண்டிருந்தாள்.
இரண்டாவது அவளிடம் இல்லாத நாணம். புதுமணப்பெண்ணுக்கே ஏன் பெண்ணுக்கே உரியதாகக் கூறப்படும் நாணம் அவளிடம் மருந்துக்குக் கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவளுடைய கணவன்தான் கீழே குனிந்து செடிகளைப் பார்த்துக்கொண்டே வர, அவள் தலைநிமிர்ந்து சுற்றுப்புறத்தில் கவனத்தைச் செலுத்தியபடி வந்தாள். கணத்திற்கொருமுறை கணவனிடமும்.
மூன்றாவது அவளுடைய கணவன். மனைவியைப் பார்ப்பது போல மரத்தையும் மரத்தைப் பார்ப்பது போல மனைவியையும் பார்த்தபடியே நடந்துவந்து கொண்டிருந்தான் அவன். ஆனால் அதைக் குறித்து கவலைப்படவேண்டியவள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கூர்ந்து கவனித்தால் கவலைக்குப் பதிலாக அவளுடைய முகத்தில் சிறு ரசனை ஒன்று இருந்தது. அது நிச்சயமாக சுற்றியிருந்த இயற்கையை ரசித்ததனால் வந்ததல்ல.
சிறிது தூரம் இருவரும் அமைதியாக நடக்க, ஒரு குறுமரத்தைக் கண்டதும் சட்டென நின்றான் அவன். அதனுடைய இலைகளில் ஒன்றைப் பறித்து முகர்ந்து பார்த்தவன், அதனுடைய பட்டையை லேசாக உரித்து, தன்னிடமிருந்த சிறுகத்தி ஒன்றால் உட்புறத்தைச் சுரண்டிப் பார்த்தான். எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது போல.. அல்லது எதிர்பாராததோ? அவனுடைய முகம் லேசாக மலர்ந்தது.
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)