" என்னடா ஆதி ராஜ ராஜேஸ்வரி உன்னிடம் ரொம்ப தன்மையாக நடந்துகொள்கிறார்கள். பூமி எதுவும் மாற்றி சுற்றுகிறதா?" என்று ஆதீஸ்வரனின் காதை கடித்தான் சூர்யா.
"தெரியலையடா!!! புலி பதுங்குதா? இல்லை பாய தயாராகுதான்னே தெரியலையே. தாய் புலிதான் இப்படியென்றால் குட்டி புலி அதுக்கு மேலே இருக்கு. கோல்டு மெடல் வாங்கப்போறேன் என்று போன பயபுள்ள போனில் கூட பேசமாட்டேங்குது. அப்பாய்மென்ட் வாங்கி பேச வேண்டியதிருக்கு.
சரி மாறிட்டா போலன்னு நினைச்சா அதுவும் இல்லை. நீ போட்டுக்கொடுக்கும் போது சரியா வந்து சங்கை பிடிச்சிடுது. என்னதான் மனசுல நினைச்சிட்டு சுத்துதோ!!!" என்று பேசிக்கொண்டே கையை தட்டிக்கொண்டிருந்தான் ஆதீஸ்வரன். இரண்டாம் ஆண்டு முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு மாணவர்களின் பெயர்களை வாசிக்கும் போதும் அவர்களுக்கு பட்டத்தை கொடுத்து கொண்டிருந்தார் தனுஷ்கோடி. ஆதீஸ்வரன் பெயர் வாசிக்கப்படும் போது மகளை பார்த்தார் அவர். சிரித்துக்கொண்டே எழுந்து வந்தாள் அவள். வீட்டிலிருந்து வரும் போதே தந்தையிடம் கேட்டுவிட்டுதான் வந்திருந்தாள் அவள்.
ஆதீஸ்வரன் கையில் பட்டத்தை கொடுத்த ஆஷ்னா கண்ணில் அப்படி ஒரு சந்தோசம். அவனுக்கும் அந்த நொடியை வார்த்தையால் விவரிக்க முடியாத நிலையில் இருந்தான். வெறும் பள்ளிப்படிப்போடு முடிந்துபோயிருக்க வேண்டிய தனது படிப்பு கல்லூரிவரை வந்தது மட்டுமில்லாது இளங்கலையோடு நின்றுவிடாமல் முதுகலை வரை வந்ததற்கு காரணமானவளின் கையால் பட்டத்தை பெற்றது அவனுக்கு எல்லையில்லா ஆனந்தத்தை தந்தது. மேடையென்றும் பாராமல் பக்கத்தில் நின்று வாழ்த்து கூறிய தனுஷ்கோடியின் காலை தொட்டு ஆசிபெற்றான் அவன். அவனை கட்டியணைத்த அவர் " மை பாய் " என்றார் பெருமிதத்துடன்.
கல்லூரி படிப்பு முடிந்துவிட்டது. அடுத்து கேம்பஸ் இன்டர்வீவில் வாங்கிய வேலையில் போய் சேரவேண்டும் என்று ஆதீஸ்வரன் நினைத்துக்கொண்டிருக்க தனுஷ்கோடியிடம் இருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.
CZYTASZ
காதலின் மாயவொளி
Romansஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.