💕 அன்றில் அவன் 8 💕

119 8 1
                                        

அத்தியாயம் : 8  

சமயலறையிலிருந்து அவர்கள் பேசுவதை ஓரளவு கேட்டுக் கொண்டு வெளியே வந்த தமிழினி தன் அத்தை அழுவதை பார்த்தவளோ தவிப்போடு செய்வதறியாது நின்றாள்.

“இங்கே பாரும்மா இப்படி வந்த உடனே அழுதா எப்படிம்மா..? நீ முதல அழமா இரு. எல்லாம் சரி பண்ணிரலாம்த்தா...” ஆறுதலாய் தாத்தா கூற,

“ஆமா அத்தை. நீங்க அழாதீங்க முதல நீங்க உட்காருங்க...” என்றவளோ சேரினை எடுத்து போட்டு அமர வைக்க, பயத்தோடு கோவமாய் இருந்த மாமாவினை கண்டாள்.

“எப்படிம்மா இருக்கே..?”

“நல்லாயிருக்கேன் அத்தை...”

“இந்தாங்க இந்த காபீயை குடிங்க. ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கீங்க..? எல்லாரும் நல்லாயிருக்காங்களா..?” சிறுவயதாக இருக்கும் போது இவர்களையும், இவர்களின் பிள்ளைகளையும் கண்டது. இருந்தாலும் முகமோ அழியாது மனதுக்குள் பதிந்திருந்தது. உறவு என்று சொன்னால் இருப்பது இவர்கள் மட்டும் தானே..!

“நல்லாயிருக்காங்க...”

“ஆமா இப்போ இதுக்கு தான் வந்தோம் பாரு. அப்பா நீங்க சீக்கிரம் முடிவை சொல்லுங்க. பிள்ளைகளை விட்டுட்டு வந்திருக்கோம். எவனாவது வந்து தொல்லை பண்ணிட்டு இருப்பானுக...” என்க, தவறு செய்த பின்னும் கூட குரலில் அதிகாரம் இருப்பதைக் கண்ட தமிழினியின் மனமோ எரிச்சல் கொண்டது.

‘என்ன செய்வது தன்னால் தான் வெளிப்படுத்த முடியாதே..! எந்த உரிமையும் இல்லையே..?’

பரமமூர்த்தி பேத்தியை தான் கவலையோடு கண்டார். முடிவெடுக்க வேண்டிய நிலை தான் என்றாலும் ஏனோ முடியவில்லை. மகன் ஒரு புறம் பேத்தி ஒரு புறம் இரண்டும் ஒன்று தான்.

“சரிப்பா நான் யோசிச்சி இடம் எவ்வளோ போகுன்னு விசாரிச்சி சொல்லுறேன்...”

“நல்லது. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்துறேன்...” கூறிய திருத்தனி வெளியேச் சென்று விட, அதன் பிறகே நிம்மதியாய் பெருமூச்சு விட்டாள் தமிழினி.

 அன்றில் அவனோ Место, где живут истории. Откройте их для себя