மறுநாள் மருத்துவரிடம் யாழினியை அழைத்துச் சென்றான் ருத்ரன். அவள் கருவுற்று இருப்பதை மருத்துவர் உறுதிப்படுத்தி விட மகிழ்ச்சியில் இருவருக்கும் அகமும் முகமும் நிறைந்தது. பொதுவாகவே இருவருக்குமே ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பதால் யாழினி நன்றாக இருப்பதாகவும் மேலும் சில கர்ப்பகால வழிமுறைகளை அறிவுறுத்தினார் மருத்துவர். சில சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு விட்டு, பெரியவர்களை அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் இருவரும்.
மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் கல்லூரியில் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டாள் யாழினி. வாந்தி மற்றும் சோர்வு காரணமாக யாழினி அவதிப்பட, ருத்ரன் உடன் இருந்து தாயாக அவளைத் தாங்கினான். மற்றவர்கள் போல் மருந்துகள் மூலம் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்களை எடுத்துக் கொள்வதில் இருவருக்குமே விருப்பம் இல்லை என்பதால், இயற்கை உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்தனர்.
வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் கால மனிதர்களுக்கு, வாழும் இந்த வாழ்க்கை ஒரு வாய் உணவிற்காக என்பதை மறந்து விட்டனர். பெரும்பாலான மனிதர்கள் பெற்றவர்கள், சொந்தங்கள், மன அமைதி, நல்ல உணவு என்று எல்லாவற்றையும் மறந்து விட்டு இயந்திரம் போல் பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கின்றனர்!
அலுவலகத்தில் முன்பை விட பொலிவுடன் முகத்தை நிரப்பும் புன்னகையுடன் வலம் வந்தான் ருத்ரன். அவனது மகிழ்ச்சி எரிச்சலை தர, அதை வெளிக்காட்டாமல் குரூர புன்னகையுடன் அவனை நெருங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் லீனா. முக்கியமான வேலை காரணமாக ருத்ரனை அடிக்கடி சந்திக்கும் சாக்கில் அநாவசியமாக பேச, லீனாவின் பேச்சில் உள்ள செயற்கைத்தனம் அவனை முகம் சுளிக்க வைத்தது.
லீனாவின் திமிரும் அலட்சியமும் உடன் வேலை செய்யும் பெரும்பானவர்களை அவளிடம் இருந்து ஒதுக்கியே வைத்தது. இருப்பினும் அவளின் அந்த செயற்கைத்தனம் சிலரை அவள் பக்கம் ஈர்க்க தான் செய்தது! லீனாவின் இந்த ஓநாய் தனத்தை ஆதியும் சாதனாவும் நன்றாக புரிந்து கொண்டாலும், 'ருத்ரனின் மேல் இவளுக்கு என்ன வன்மம்?' என்று குழம்பி போனார்கள்!
YOU ARE READING
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!