கவிதையே தெரியுமா
அன்று நடந்தவை யாவும் கனவு போலவே இருந்தது அவளுக்கு. பேருந்து வந்தவுடன் விஷ்வா சென்று பின்னால் ஏறிக் கொள்ள, அவள் ஏதும் கேட்க முடியாமல் போனது.
அவள் அமைதியாக வீட்டிற்கு வந்தாள். அதிகம் பேசாமல் உணவருந்தி விட்டுத் தன் அறையில் முடங்கினாள். அப்பா ராஜகோபால் அவரது வேலையில் மும்முரமாக இருந்ததால் அவளைக் கவனிக்கவில்லை. அவருக்கு நாளை அலுவலகத்தில் செயற்குழு போர்ட் மீட்டிங் இருந்தது.
மஹிமாவுக்கும் அது நல்லதாக அமைந்தது. ஏனெனில் அப்பா கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலையில் இப்போது அவள் இல்லை.
ஏன், அவளது மனதில் இருந்த கேள்விகளுக்கே அவளிடம் பதிலில்லையே..
'விஷ்வா....ஏன் விஷ்வா? ஏன் இப்படி செய்தாய்? உனக்குள் இத்தனை எண்ணங்கள் எப்போதிலிருந்து? வெறும் ஈர்ப்பு என்றால் இத்தனை வருடங்கள் எப்படி நிலைத்திருக்க முடியும்? நான் என்றால் உனக்கு அவ்வளவு இஷ்டமா? நீ சொல்லவேண்டிய காதலை அவன் சொல்லிவிட்டான் என்று அவனை அப்படி அடித்தாயே? அது சரியா தப்பா? இப்படித்தான் காதலிப்பதா?
இல்லை இது வெறும் ஈர்ப்பு தானா? நீ அதை சிந்திக்காமல் ஏதேதோ முடிவெடுத்திருந்தால்... காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டிருந்தால்?
ஐயோ... நான் ஏன் இப்படிப் புலம்பித் தவிக்கிறேன்? அவனிடம் பேசலாமா? அவனை அழைக்கலாமா? ஐயோ... அழைத்து என்ன பேசுவது? என்ன கேட்பது? ஒன்றும் வேண்டாம்.... அப்போது இப்படியே புலம்பித் தவிக்க வேண்டியதுதானா...'மஹிமா அன்று முழுவதும் தூங்கவில்லை. அவளுக்கு முன்னர் புரியாததெல்லாம் இப்போது புரிந்ததுபோல் இருந்தது.
பள்ளியில் தனக்காகக் கூடுதலாக சப்பாத்திகள் கொண்டுவருவது... எதாவது நோட்டை அவள் மறந்து வந்தால், தன் நோட்டைத் தந்துவிட்டு அவன் வெளியே சென்று நிற்பது... நண்பர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருந்தாலும் அவள் சிரிக்கும்போது அவன் முகத்தைப் பார்த்தே அவனும் சிரிப்பது... பேருந்தில் முதலில் அவளுக்கு இடம்பிடித்துவிட்டுத் தனக்காக இடம்தேடுவது...
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.