உயிர்மெய்
வீட்டிற்குச் செல்ல இழுத்த மஹிமாவின் கையை மெதுவாக விடுவித்தான் அவன்.
"நான் வரல மஹிமா"
அவன் கூறிவிட்டு அப்படியே நிற்க, அவள் குழப்பத்தோடு அவனை திரும்பிப் பார்த்தாள்.
"நான் உன்னைக் காதலிக்கறதும் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறதும் உனக்கும் எனக்கும் வேணா சரியா இருக்கலாம். ஆனா நம்ம வீட்ல...?" என இழுத்தான் அவன்.
மஹிமாவுக்குக் குழப்பமும் கோபமும் வந்தது.
"என்ன பேச்சு இது விஷ்வா? ஏன் நீ இப்டிலாம் யோசிக்கற? எதுவா இருந்தாலும் வழியில பேசலாம். ப்ளீஸ் வா."
அவள் பதற்றம் கண்களில் தெரிந்தது. 'ஏன் இவன் இப்போது இதையெல்லாம் பேசுகிறான்' என்று மனதுக்குள் புலம்பினாள் அவள்.
அவன் கையைப் பிடித்து அவள் அழைக்க, மீண்டும் மெல்ல அதை விடுவித்துக்கொண்டு,
"நீ வீட்டுக்குப் போ.. நான் இப்ப வரல. வேலை தேடப் போறேன். உன்னைக் கட்டிக்கறதுக்கு எப்ப எனக்குத் தகுதியிருக்குன்னு தோணுதோ, அப்ப நான் வர்றேன்.." என்றவாறு தன் பையை எடுத்துக் கொண்டு நகர முயன்றான் அவன்.அவள் அதிர்ச்சியில் உறைந்துபோனாள்.
"வி..விஷ்வா.. இப்படி திடீர்னு விட்டுட்டுப் போனா..நான் என்ன...நான் என்ன விஷ்வா பண்ணுவேன்?"
அவள் குரல் தழுதழுத்தது. ஆனாலும் அவன் பேச்சிலிருந்த நியாயம் அவளை வேறெதுவும் செய்யவிடாமல் தடுத்தது.
அவனது கண்களும் கலங்கியது. வேகமாக வந்து அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டான் அவன்.
"சாரி மஹி.. நான் இந்த முடிவை எப்பவோ எடுத்துட்டேன். கல்யாணம் பண்ணிக்கறதா இருந்தா, உன்னைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஆனா அது ரெண்டு ஃபேமிலியோட சம்மதத்தோட நடக்கறதுதான் கரெக்ட். அதுக்கு நான் தகுதியானவனா இருக்கணும். என்னதான் காதல் இருந்தாலும், எனக்குன்னு ஒரு அடையாளம் இல்லாம கல்யாணம் செஞ்சா சரிவராது. இதை.நான் முதல்லயே சொல்லியிருந்தா நீ என்னை விட்டிருக்க மாட்ட... அதான் சொல்லலை. கவலைப்படாத மஹி. நீ போ. பத்தரமா போ. எப்பவும் உன்னைத் தனியா விடமாட்டேன் நான். உனக்காக நான் கண்டிப்பா வருவேன்"

VOCÊ ESTÁ LENDO
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.