~ எப்போதும் ஆள் நடமாட்டம் நிறம்பியிருக்கும் அந்த பகுதி, இப்போது வெறிச்சோடி கிடக்கிறது. சுற்றிலும் பூத்துக் குலுங்கும் மலர் கொடிகளுக்கு நடுவே செல்லும் படிகளுக்கு மத்தியில் அவள் மட்டுமே நடந்துக் கொண்டிருக்கிறாள், ஜல் ஜல் கொலுசொலியுடன்... பிறை மதியின் மந்தார ஒளியுடன்.
வைரங்களை செதுக்கிச் செய்த படிகள்–அவள் நடந்துக் கொண்டிருக்கும் படிகள்–நேராகச் சென்று நிறைவுற்றது, வைரமாளிகையின் மையக் கோட்டையின் பிரம்மாண்டக் கதவின் முன். ஆதிலோகத்தின் மகாராணி வாழும் கோட்டையின் விசாலமான கதவின் முன்.
மகாராணியின் அழைப்பின்றி வரும் யவருக்கும் அக்கதவுகள் திறக்காது என்பதை அறிந்திருப்பதால் அவ்வளவு எளிதில் யாரும் செல்ல நினைத்திறாத அந்த கதவின் முன் இப்போது நிற்கிறாள் அவள். கதவுக்கு மட்டும் மனித உருவம் இருந்திருந்தால், அதன் முழங்கால் உயரம் தான் இருப்பாள் அவள். அந்த வர்ணனையை நினைத்துக் கொண்டவள் நிஜமாகவே அதை ஒரு மனிதனாக நினைத்துக் கொண்டாள் போலும், வழி கொடுக்கச் சொல்லிடும் பார்வையுடன் அதன் முகம் நோக்கி அவள் நிமிற.. சத்தமே இல்லாமல் விசாலமாகத் திறந்துக் கொண்டது அக்கதவு. எவ்வித தயக்கமும் இன்றித் தன் அடிகளை முன்னோக்கிச் செலுத்தினாள் அவள்.
கோட்டையின் வரவேற்புக் கூடத்தின் நாலாபுறமும் மின்னும் வைரங்களில் மினுக் மினுக் ஒளி! ஒளியை தவிர்த்து அங்கு வேறு எதுவுமே இல்லை- இல்லை, ஒன்று இருக்கிறது! வெள்ளை நிற வைர ஒளியை தவிர்த்து, வித்தியாசமாக ஒளியை தந்துக் கொண்டிருக்கும் அந்த மயிலாசனம்!! கண்ணாடி போல் ஜொலிக்கும் அந்த மயிலாசனத்தின் உச்சத்தில் ஒரு உருண்டை கல் பதிக்கப்பட்டு, அதிலிருந்து ஐந்து நிற ஒளிகள் வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு என ஒன்றுக்குள் ஒன்றாக, ஒன்றுக்கொன்று அளவில் சிறியதாகிக் கொண்டே போகும் நான்கு கற்களையும் மொத்தமாகச் சேர்த்து மூடியிருக்கும் கண்ணாடி போலான வைரம் அது. உள்ளுக்குள் இருக்கும் நான்கு கற்களின் ஒளியானது அவைகளை மூடியிருக்கும் வைரத்தின் ஒளியுடன் இணைந்து, ஐந்து வண்ணக் கதிர்களாக, அந்த மயிலாசனத்திலிருந்து குறிப்பிட்டத் தொலைவு வரையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
YOU ARE READING
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poetryகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...